திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

புதன், 29 மார்ச், 2023

நலம் தரும் எண்ணெய் குளியல்

 நலம் தரும் எண்ணெய் குளியல்: 

தமிழர்களின் பாரம்பரிய முறைகளில் எண்ணெய்  குளியல் அல்லது எண்ணெய்   முழுக்கு மிக முக்கியமானது.

``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்று நான்கு நாளைக்கு ஒரு முறை எண்ணெய் முழுக்கு எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. குளிர் காலத்தில் வாரம் ஒரு  முறையும், வெயில் காலத்தில் வாரம் இரு முறை எண்ணெய்  முழுக்கு எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை,ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை எண்ணெய் முழுக்கு செய்ய வேண்டும். ஆனால் இந்த பழக்கம் காலமாற்றத்தால் மாறி தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக மாறியுள்ளது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் ?

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பலம் பெற்று உடலில் எந்த நோயும் வராமல் உறுதிபடும் . உடலின்  அதிக உஷ்ண தன்மை குறைவதால் முடி உதிர்வு பிரச்சனை சீராகி தோல் வறண்டு போகும் பிரச்சனை சீராகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராகுவதால் சோம்பல் போன்ற பிரச்சனை தீர்வதோடு, உடலின் குற்றங்கள் அனைத்தும் சீராகிறது.

எந்த எண்ணெய் சிறந்தது ?

நல்லெண்ணெயே மிகவும் சிறந்த எண்ணெய். இது போக விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றையும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணைய்,விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவாக கலந்து முக்கூட்டு எண்ணெயாக பயன்படுத்தலாம்.மேலும் நோய்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் முழுக்கு கடைப்பிடிக்க படுகிறது. அதில் நொச்சி தைலம், சுக்கு தைலம் போன்றவை அடங்கும்.

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும் ?

பாரம்பரிய மருத்துவ முறைப்படி உடலில் உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை பரவலாக தேய்க்க வேண்டும். அதில் மூன்று துளி காதிலும், இரண்டு துளி மூக்கிலும் விட வேண்டும். பிறகு 30  முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே உடலில் எண்ணெயை ஊறவிட வேண்டும். பிறகு, மூலிகை பொடி போட்ட வெந்நீரில் எண்ணெய் பிசகு போகும் வரை நன்கு குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி போட்டு தலை மற்றும் முடிக்கு தூபம் போட வேண்டும். நல்லெண்ணையில்  வைட்டமின் E  சத்து அதிகம் உள்ளதால் அது உடலின் தோலின் வயதாகும் தன்மையை நிறுத்தி, நம் தோலை பிரகாசம் அடையச் செய்யும்.

சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள் ?

சிலருக்கு எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்கலாம். அதற்கு ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை சுக்கு தூள், ஒரு பல் பூண்டு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை  60 மில்லி நல்லெண்ணையில் காய்த்து  எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்காது.

தலைக்கு தேய்த்து குளிக்க எது சிறந்தது ?

தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய் தான் சிறந்தது. ஷாம்புகளில் அதிக கெமிக்கல் இருப்பதாலும், அவை எண்ணெய் பிசகு சரியாய் போக்காது என்பதாலும் சீயக்காய் தான் சிறந்தது.

உடலிற்கு தேய்த்து குளிக்க  நலங்கு மா,பாசி பயறு மாவு சிறந்தது.

புதியதாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் உடல் சோர்வு, சளி பிடிக்கும் தன்மை இருக்கலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சரியாக தொடர்ந்து கடைபிடிக்க இதுவும் படி படியாக மறைந்து போகும்.