திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

உணவே மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவே மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 ஜூலை, 2023

சாக வாழ்வை தரும் மூலிகை குடிநீர்கள்

 

            நோயற்ற வாழ்வே உயர்ந்த செல்வம், மனித உடல் பல வகையான

அகம் மற்றும் புற சூழ்நிலைகளின் தாக்கங்களை சமாளிக்க முடியாமல்

போகும் போது உடலில் நோய் நிலை உண்டாகும், இந்த சூழ்நிலை

தாக்கங்களை நாம் அன்றாடம் பயன் படுத்தும் விதமாக சித்த மருத்துவம்

மூலிகை நீர்களை வழங்கி உள்ளது.பின் வரும் மூலிகை நீர்கள் பற்றி

தெரிந்து பயன் அடையவும்.



1)தேற்றான் கொட்டை நீர்

உபயோகம் : இயற்கை நீர் சுத்திகரிப்பு

செய்முறை:

தேற்றான் கொட்டைகளை அம்மியில் வைத்து இழைத்து நீரில் கலந்து 8 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும்.

பயன்கள்:

*நீரில் உள்ள மாசை அகற்றுவதுடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

*சிறுநீர் பிரச்சனை மற்றும் வயிற்று போக்கை குணமாகும்.


2)செம்பருத்தி தேநீர்

உபயோகம்: இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உள்ள பிரச்சனைக்கு

செய்முறை:

    2 செம்பருத்தி பூவில் உள்ள காம்பு, மகரந்த குழாய்களை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் 1 டம்ளர் சூடான நீரில் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் பிறகு வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்:

*தினமும் அருந்தி வர சருப பொலிவு தரும்

*மாதவிடாய் சீராகும்

*உயர் இரத்த அழுத்தம் சீராகும்.


3)நெல்லி ஊறல் நீர்.

உபயோகம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க.

செய்முறை:

    இரவு 10 நெல்லி வற்றலை இரண்டு டம்ளர் நீரில் ஊறவைக்க வேண்டும்.காலையில் எழுந்ததும் நன்றாக கலக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.

பயன்கள்:

*தினமும் குடிக்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*தலையில் நரைமுடி பரவுவது தடுக்கும்.

*முடி வளர்ச்சி அதிகரிக்கும்.


4)நன்னாரி ஊறல் நீர்

உபயோகம்:உடல் குளிர்ச்சி அடைய.

செய்முறை:

    நன்னாரி வேரை சுத்தம் செய்து இடித்து பொடியாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து,சூடு ஆறியதும் வடிகட்டி எழுமிச்சை சாறு கலந்து பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

பயன்கள்:

*உடலில் வியர்வை அதிகரிக்க செய்யும்.

*இரத்தம் சுத்தமாகும்.

*உடல் சூடு தணியும்.

*தாகம் கட்டுப்பாடும்.

*சரும பிரச்சனைகள் தீரும்.


4)வில்வ இலை ஊறல் நீர்.

உபயோகம்:பித்தம் தீர 

செய்முறை:

    ஆறு வில்வ இலைகளை இடித்து ஒரு டம்ளர் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து பின் ஊறிய நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பயன்கள்:

*தினந்தோறும் குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும்,உடல் குளிர்ச்சி அடையும்.

*தீராத வயிற்று வலி தீரும்.

*சர்க்கரை நோயாளிகள் இந்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


5)வெட்டி வேர் ஊறல் நீர்.

உபயோகம்: உடல் எரிச்சல் தனிய.

செய்முறை:

    வெட்டி வேரை சுத்தம் செய்து பொடியாக்கி தண்ணீரில் 3  மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி அருந்தவும்.

பயன்கள்:

*காலை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

*கண் எரிச்சல், அதிக தாகம், உடல் எரிச்சல் ன, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.


6)சீரக தண்ணீர்.

உபயோகம்: வயிற்று பிரச்சனை தீர.

செய்முறை:

    1 லிட்டர் நீரில் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தவும்.

பயன்கள்:

*காலையில் தினமும் அருந்தி வந்தால் செரிமான பிரச்சனை, வயிற்று வலி, உடல் பரும் தீரும்.





 


புதன், 29 மார்ச், 2023

நலம் தரும் எண்ணெய் குளியல்

 நலம் தரும் எண்ணெய் குளியல்: 

தமிழர்களின் பாரம்பரிய முறைகளில் எண்ணெய்  குளியல் அல்லது எண்ணெய்   முழுக்கு மிக முக்கியமானது.

``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்று நான்கு நாளைக்கு ஒரு முறை எண்ணெய் முழுக்கு எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. குளிர் காலத்தில் வாரம் ஒரு  முறையும், வெயில் காலத்தில் வாரம் இரு முறை எண்ணெய்  முழுக்கு எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை,ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை எண்ணெய் முழுக்கு செய்ய வேண்டும். ஆனால் இந்த பழக்கம் காலமாற்றத்தால் மாறி தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக மாறியுள்ளது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் ?

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பலம் பெற்று உடலில் எந்த நோயும் வராமல் உறுதிபடும் . உடலின்  அதிக உஷ்ண தன்மை குறைவதால் முடி உதிர்வு பிரச்சனை சீராகி தோல் வறண்டு போகும் பிரச்சனை சீராகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராகுவதால் சோம்பல் போன்ற பிரச்சனை தீர்வதோடு, உடலின் குற்றங்கள் அனைத்தும் சீராகிறது.

எந்த எண்ணெய் சிறந்தது ?

நல்லெண்ணெயே மிகவும் சிறந்த எண்ணெய். இது போக விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றையும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணைய்,விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவாக கலந்து முக்கூட்டு எண்ணெயாக பயன்படுத்தலாம்.மேலும் நோய்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் முழுக்கு கடைப்பிடிக்க படுகிறது. அதில் நொச்சி தைலம், சுக்கு தைலம் போன்றவை அடங்கும்.

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும் ?

பாரம்பரிய மருத்துவ முறைப்படி உடலில் உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை பரவலாக தேய்க்க வேண்டும். அதில் மூன்று துளி காதிலும், இரண்டு துளி மூக்கிலும் விட வேண்டும். பிறகு 30  முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே உடலில் எண்ணெயை ஊறவிட வேண்டும். பிறகு, மூலிகை பொடி போட்ட வெந்நீரில் எண்ணெய் பிசகு போகும் வரை நன்கு குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி போட்டு தலை மற்றும் முடிக்கு தூபம் போட வேண்டும். நல்லெண்ணையில்  வைட்டமின் E  சத்து அதிகம் உள்ளதால் அது உடலின் தோலின் வயதாகும் தன்மையை நிறுத்தி, நம் தோலை பிரகாசம் அடையச் செய்யும்.

சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள் ?

சிலருக்கு எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்கலாம். அதற்கு ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை சுக்கு தூள், ஒரு பல் பூண்டு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை  60 மில்லி நல்லெண்ணையில் காய்த்து  எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்காது.

தலைக்கு தேய்த்து குளிக்க எது சிறந்தது ?

தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய் தான் சிறந்தது. ஷாம்புகளில் அதிக கெமிக்கல் இருப்பதாலும், அவை எண்ணெய் பிசகு சரியாய் போக்காது என்பதாலும் சீயக்காய் தான் சிறந்தது.

உடலிற்கு தேய்த்து குளிக்க  நலங்கு மா,பாசி பயறு மாவு சிறந்தது.

புதியதாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் உடல் சோர்வு, சளி பிடிக்கும் தன்மை இருக்கலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சரியாக தொடர்ந்து கடைபிடிக்க இதுவும் படி படியாக மறைந்து போகும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கழுதை பால் என்னும் அமுதம்


      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, வெயிலில் மழை பெய்தால் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் என கழுதையை  மையமாக வைத்து பழமொழிகள் உள்ளன.அந்த காலத்தில் வண்ணர்கள்  ஊர் மக்களின் துணி மூட்டைகளை ஆற்றங்கரைக்கு   பொதி சுமப்பதற்கு என்று கழுதையை  பிரத்தியேகமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது வாஷிங் மெஷின் மற்றும் மோட்டார் வாகனங்களும்  இதை ஓரம் தள்ளிவிட்டது. அகநானூற்றில் , உப்பலத்தில் இருந்து உப்பு மூட்டைகளை கடும் வெயில், கரடு முரடான பாதை என்று பாராமல் எடுத்து  செல்ல பயன்படுத்தப் படுகிறது என்று கழுதைகள் பற்றி பாடல் ஒன்று விவரிக்கிறது. உப்பு மட்டும் இன்றி பல்வேறு விளைபொருள்களை கழுதை மீது வைத்து சென்று உள்ளனர். 

                            

                             'வெள்வாய்க் கழுதைப் புல்லினம்' (புறம் 392 ) 

     கழுதையின் வாய் வெள்ளை நிறமாக இருக்கும் என்று புறநானூறு கூறுகிறது. 

    அக்காலத்தில் கழுதையை  வைத்து விவசாயம் செய்ததாக எந்த குறிப்பும் கிடைக்க பெறவில்லை. கழுதையை வைத்து நிலம் உழுவதை இழிவான செயலாக பார்த்தனர். போரில் தோற்றுப்போன மன்னர்களை அவமானம் செய்ய அம்மன்னர்க்கு உட்பட்ட நிலங்களில் கழுதைகளை பூட்டி உழுது வெள்ளை வரகு,கொள்ளு போன்றவை விதைக்கப் பட்டதாக புறநானூறு கூறுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித நாகரிக வளர்ச்சிக்கு தேவையாக இருந்தாலும், அது சுற்றுச்சூழலுக்கும் , மற்ற உயிர்களுக்கும் இடையூராக உள்ளது. சமீபத்திய ஒரு புள்ளி விவரம் தமிழ்நாட்டில் ஆயிரம் கழுதைகளுக்கு குறைவான கழுதைகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. கழுதைகளின் தேவை குறைந்ததால் உணவு  பட்டியலிலே  இல்லாத கழுதைகளை தற்போது ஆந்திர பகுதியுள் உணவாக உண்ண ஆரம்பித்து உள்ளனர்.

    திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை Biodiversity conservation foundation விஞ்ஞானி ஏ .குமரகுரு ஹிந்து நாளிதழுக்கு 25, ஜூலை  2020 அன்று கொடுத்த பேட்டியில்  மற்ற விலங்கினங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நம் சமூகத்தில் கழுதைக்கு கொடுப்பது இல்லை. இதுவே இதன் அழிவுக்கு காரணம். சமகாலத்திய அழிவு பட்டியலில் கழுதையும் சேர்ந்து விட்டது.

கழுதை பாலை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்:

    மற்ற கறவை இனங்களில் இருந்து கழுதையானது சற்று வித்தியாசம் படுகிறது. குறிப்பாக பால் கறப்பதில் ஒரு நாளைக்குள் 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் பால் மட்டுமே கறக்கும். கழுதையின் எண்ணிக்கை குறைந்ததால் தற்போது  இதன் ஒரு சங்கு பால், ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை  விற்கப்படுகிறது .இதற்கான காரணம் நம்முடைய புறக்கணிப்பும்  மற்றும் அதன்  பால் தற்போது உலக டாப் கிளாஸ் பாலில் ஒன்றாக விற்கப்படுகிறது .   இத்தாலி நாட்டில் நோய்  பாதித்த குழந்தைகளுக்கு,உடல்  இளைத்த குழந்தைகளுக்கும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கும்  கழுதையின் பால் ஒரு சிறந்த மாற்று பாலாக பயன்படுத்தி வருகின்றனர். 

    இதில் முக்கியமாக மாட்டுப்பால் புரத அல்ர்ஜி (cow milk protein allergies) (CMPA)உண்டாகும் குழந்தைகளுக்கு வெளி நாடுகளில் கழுதை பாலை மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். மாடுகளின் பாலில் உள்ள கொழுப்பு, புரதம், inorganic உப்புகள் கழுத்தை பாலில் குறைவாகவே உள்ளது. ஆனால் மற்ற பாலை விட தாய்ப்பாலுக்கு நிகரான அதிக  அளவு லாக்டோஸ் உள்ளது. இதன் காரணமாக கழுதை பால் இனிப்பாக உள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தாய்ப்பாலை விட உயர்ந்ததாக கழுதை பாலை கூறி உள்ளனர். ஏறக்குறைய தாய் பாலிலும் கழுதை பாலிலும் ஒரு விகிதாச்சார சத்துக்கள் உள்ளன.

    கழுதை பாலில் அதிக அளவு உள்ள லாக்டோஸ் குழந்தைகளின் வயிற்றில் சரியான அளவு கால்சியம் சத்தை உரிய வைத்து குழந்தைகளின் எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.மேலும் குழந்தைகளின் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள பேட்டி ஆசிட் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்வது மட்டும் அல்லாமல் அவர்களின் மூளை வளர்ச்சியை சீர் செய்து நியாபக ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. பெரியவர்களுக்கு atherosclerosis மற்றும் இதய நோய்   உள்ளவர்களுக்கு இது நோயின் தாக்கத்தை சீர் செய்வதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

சித்த மருத்துவத்தில் கழுதை பால் பற்றி என்ன கூறி உள்ளனர்:

"கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்

 தழுதளையுள் வித்திரதி தானே - யெழுகின்ற

ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிரங்கு 

கட்டியிவை போக்குங் கழறு"

 

"கத்தபத்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்

சித்தப்பிரமை பித்தந் தீருங்காண் - தத்திவரும் 

ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்

செய்ய மடமயிலே செப்பு"

    மிகவும் இனிப்பான கழுதைப்பால் வாதநோய், கரப்பான், புண், தழுதளைநோய், கட்டி, கிரந்தி, சீழ்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புத-ரணம், புத்திமாற்றம், பித்ததோடம், கபநோய் இவை களைப் போக்கும்.மேலும் கழுதை பாலை ஓணான் ரத்தத்துடன் கலந்து கிரந்தி நோய் (Pediatric Heart Disease) பாதித்த குழந்தைகளுக்கு கொடுத்த பழக்கமும் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

    மேற்கண்ட மருத்துவ பயன்கள் மட்டும் அல்லாமல் கழுதை பாலில் Anti-Microbial,Anti-Viral,Anti-Tumour,Anti-Stress போன்ற மருத்துவ தன்மை உள்ளதாக நவீன ஆய்வுகள் கூறுகிறது.

    இப்படி மருத்துவ பயனை மட்டும் கொண்டிராமல், தோல் சார்ந்த அழகியலுக்கும் இதன் பால் பயன்படுகிறது,உதாரணமாக கிளியோபாட்ரா போன்ற அரசிகள் தங்கள் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கழுதை பால் குளியல் எடுத்த வரலாறு  எல்லாம் உண்டு. இதில் உள்ள Anti-Agening, Anti-Oxident, Vitamin சத்துகள் வயதாகும் தன்மையை தடுக்கிறதாம். தற்போது ஹாலிவுட் முதல் கோலிவுட் அழகிகள் வரை கழுத்தை பாலில் செய்த Face Cream மை பயன்படுத்துவதாக தகவல். 

    இப்படி பட்ட மருத்துவ குணம் வாய்ந்த கழுதையை  சரியான முறையில் அழிவு பாதையில் இருந்து மீட்டு, அவற்றின்  எண்ணிக்கையை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இதற்கான முறையான ஒரு அமைப்பை அமைத்து கால்நடை துறை பராமரிக்க வேண்டும்.

                                  

              "இப்படி பட்ட கழுதை பாலை அமுதம் என்று சொல்லலாம்"

மருத்துவர் விக்னேஷ் குமார் 877-858-7349




ஞாயிறு, 29 ஜனவரி, 2023

உணவா ? மருந்தா ? நஞ்சா ? ( பகுதி 2) -சித்த மருத்துவம்

 வணக்கம், உணவா ? மருந்தா ? நஞ்சா ? என்ற கட்டுரை தொடரில் இரண்டாம் பகுதி பற்றி நாம் காண்போம்,

முதல் பகுதியை படிக்க பகுதி 1


                                                                               

மக்கள் தற்காலத்தில் எளிய மருத்துவத்தை  பெரிதும் விரும்புகின்றனர்,இந்த கொரோனா பெரும்தொற்றுக்கு பிறகு தமிழர் பாரம்பரியமான சித்த மருத்துவத்தின் மீது நமக்கு தற்போது பெரிய ஆர்வம் மீண்டும் வந்துள்ளது,சமீபத்தில் உலக சுகாதார மையம் நம் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு  உலகளவில் அங்கீகாரம் கொடுத்துள்ளது இதன் மூலம் பல ஆராய்ச்சிகள் சித்த மருத்துவத்தின் மீது நடக்கும்,நம் சித்த மருத்துவத்தின் தொன்மையை, அறிவியலின் துணை கொண்டு ஒரு புதிய பாதைக்குள் பயணம் செய்ய  வைக்கமுடியும்,நம் நாட்டு மக்கள்  மட்டும் பயன் பெரும் சித்த மருத்துவத்தை உலக மக்கள் அனைவரும்  பயன் பெற வாய்ப்புகள் உள்ளன.

இப்போது நாம் நம் கதைக்கு வருவோம்,உணவு மருத்துவம் பற்றி ஏன் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை? சீனா தவிர ஆங்கில மருத்துவத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட  உலக நாடுகள்  இப்போதுதான் வலுவாக உணவே மருந்து (FOOD IS MEDICINE) என்ற கருத்துக்கள் தங்கள் பாதங்களை  எடுத்து வைக்கிறது, தவறான உணவு பழக்கத்தை  கடைபிடித்ததின் விளைவு உலகம் முழுவதும் 5 இல் ஒரு இறப்பு சரியான உணவு அதாவது அவர் அவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவு இன்மையால்,உண்டாவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது,இந்த இறப்பு விகிதம் புகையிலையால் ஏற்படுவதை விட அதிகமாம்.உடலுக்கு ஏற்ற உணவு என்றால் என்ன ?,  உணவானது அவர் அவர் வயதிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,உணவானது அவர் அவர் உழைப்புக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,இதில் முக்கியமாக  நோய்க்கு ஏற்ற உணவு அவசியம், இந்த உணவு தேவை என்பது ஒவ்வொரு நோய்க்கும் மாறுபடும்.


இந்த உணவு மருத்துவம் ஒரு நோய் உள்ளவர்களுக்கு எப்படி பயன் அடைய  வைக்கிறது ?


நோய்க்கு அல்லது உடல் சுகமின்மைக்கு குறிப்பிட்ட  உணவு வகைகள் ஒரு மருந்தாக செயல் படுகிறது  இதை  Nutraceuticals மற்றும்  Functional Foods என்றால் என்ன, என்பதை பற்றி முதல் பகுதியுள் நான் பேசி உள்ளேன்.

நமக்கு திடிர் என்று ஒரு உடல் நல குறைவு வருகிறது என்று கற்பனை செய்து கொள்வோம்,ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடலில் நாம் உள் நோயாளியாக அட்மிட்  ஆகிரோம்,மருந்து மற்றும் ஹாஸ்பிடல் செலவு செய்த பில்லுடன் நாம் மருத்துவமனையில் உண்ட உணவு பில்லும் சேர்த்து வரும்,அதில் வரும் உணவின் பில்லோ  நமக்கு வழங்கிய மருந்தின்  அளவே வரும், ஆனால்  நாம் உண்டது கீச்சாதி,இட்டிலி  போன்றவையாக இருக்கும்,  கேட்டால் ஹாஸ்பிடல் டயட் என்று கூறுவார்கள்.என்ன cm அம்மா 1 கோடி ரூபாய்க்கு இட்டிலி சாப்பிட்ட கதை போன்று உள்ளதா ?அந்த மருத்துவமனைகளில் ஏன் அவ்வளவு  உணவு தொகை வாங்குகிறார்கள் என்று தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.


Medically Tailored Meals (MTM) என்றால்

என்ன ?


Medically Tailored Meal ( MTM) என்றால் அவர் அவர் நோய் நிலைக்கு ஏற்ற உணவுகளை, உணவியல் நிபுணர்களால் மற்றும் பிற  மருத்துவ நிபுணர்களால் சரியான முறையில் நோயின் நிலை அறிந்து நோய் நிலையை மேம்படுத்த பரிந்துரை செய்யப்படும் உணவுகளாகும்.

1980 இதில் அமெரிக்காவில்  HIV /AIDS  நோய்க்கான சரியான மருந்து கண்டுபிடிக்காத போது, அந்த  நோயாளிகளுக்கு நோய் முற்றாமல்  நோயை  சிறந்த ஊட்டச்சத்து உள்ள உணவு வகைகளை கொடுத்து மருத்துவம் செய்தனர்,இதனால் அந்த நோயாளிகளின் நோய்  குறைந்தது மட்டும் அல்லாமல் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது.இதில் இருந்து உணவே மருந்து ( Food as medicine)  என்ற இயக்கம் அமெரிக்காவில் வளர தொடங்கியது.இதில் இருந்துதான் உணவே மருந்து  medically tailored meal (MTM) சாக மேலை நாடுகளில்  உருவானது .நமது கொரோனா கால கட்டத்திலும் MTM போன்ற உணவு வகைகளை,ஊட்டச் சத்து மற்றும் உணவு நிபுணர்கள்  நமக்கு பரிந்துரை செய்தனர்.


 MTM  இதனால் என்ன பயன் ?


 தங்களது நோய்களுக்கு  சரியான  உணவு வகைகளை எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு, மாதம் தங்களது மருத்துவ செலவில் 16 % பணத்தை சேமிப்பு செய்கின்றனராம்.மேலும் நாள்பட்ட நோய் உள்ள நோயாளிகள் இந்த உணவே மருந்தை (MTM ) பின்பற்றும்போது  50 % வரை அவர்கள் நோய்க்கு மருத்துவமனைக்கு வருகை தரும் எண்ணிக்கை குறைகிறதாம்.தற்போது    வெளிநாடுகளில் pharmacy நிறுவனங்களுக்கு  பிறகு,சில நிறுவனங்கள் medically tailored meals- சை வீட்டிற்க்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறார்கள்.இதை நகைப்பாக farmacies என்று கூட கூறுகின்றனர் ,கூடிய விரைவில் இந்த வகை உணவுகளை நம் நாட்டில் உள்ள உணவு சேவை நிறுவங்களிலும் காண வாய்ப்பு உள்ளது. 


MTM  பற்றி சித்த மருத்துவம் என்ன கூறுகிறது ?


 முதலில் பத்தியம்( Regimen of Diet ) என்றால் என்ன என்பதை காண்போம்,  சித்த மருத்துவத்தில் பத்தியம் என்பது நோய்க்கு மட்டும் அல்லாமல் நாம் எதுத்துக்கொள்ளும் மருந்துக்கும் கூறப்பட்டுள்ளது,பத்தியம் என்பது  அந்த நோய்க்கு சேர்க்க வேண்டிய உணவு  பொருட்களையும்,சேர்க்க கூடாத உணவு  பொருட்களையும்  கூறுகிறது.இப்படி பட்ட பத்திய வகைகளில் உப்பில்லா பத்தியம், இச்சா பத்தியம்,கடும் பத்தியம் போன்ற நோய்க்கு ஏற்றவாரு பல வகை பத்தியங்கள் உள்ளன.இப்படி ஒரு நோயாளிக்கு பத்தியம் கூறும் போது  அவர்களின் உடல் பலம்,உடல் நிலைமை,நோயின் வன்மை,காலம்  மற்றும் சீதோஷண நிலை  இவைகளை சரியான படி அனுசரித்து பத்திய முறை சித்த மருத்துவர்கள் கூறுவார்கள்.


பத்தியத்தின் பெருமை:


''பத்தியத்தா லுண்டாகும்  பண்டிதற்குப் பேராண்மை

 பத்தியத்தா லுண்டாகும் பண்டிதங்கள் - பத்தியத்தை

விட்டிடலை விட்டார் பிணிவகைகள் வித்தரிக்கும்

விட்டாற் பறக்கும் வினை”

-தேரன் வெண்பா செய்-600


பத்தியத்தை சரியான முறையில் கடைபிடித்தால் மருத்துவம் செய்யும் மருத்துவனும்,மருந்தும் மேன்மை கொள்வார்கள், மேலும் நோயாளியும் குணமடைவான் ,அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் நோய் மிகும்.இப்படி பத்தியத்தின் பெருமை பற்றி சித்த மருத்துவம் கூறுகிறது.

எனவே பத்திய முறையுடன் மருந்தை மருத்துவர் கூறும்படி பின்பற்றினால் நோய் தீருவது சுலபம் என்று புரிகிறது,இங்கு பத்தியம் கடைபிடிக்கவில்லை நோய் தீராது அல்லது மிகும் என்று கூறி உள்ளனர்,இது ஏன் என்று  நாம் ஒரு உதாரணத்தோடு காண்போம்  சர்க்கரை நோய் வந்த நபர், ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட மருந்தை ஒரு குறிப்பிட்ட டோஸேஜில்  எடுத்து கொள்கிறார் என்றால், அவர் சரிவர உணவு கட்டுபாடு (அதிக சர்க்கரை சத்து உள்ள பொருட்களை தவிர்த்தல்)  அல்லது Regimen of Diet அல்லதுபத்தியம்  இல்லை என்றால் நோய் அப்போதைக்கு  கட்டுக்குள் வரும், ஆனால் நாள்பட நாள்பட நோய் அந்த மருந்துக்கு கட்டுப்படாது,நோய் மிகும் பிறகு முன்பு கொடுத்த மருந்தை விட வீரியம் மிக்க வேறு மருந்தை தர வேண்டும்,

இப்படிதான் நோய் தீராது என்று கூறி உள்ளனர்.சித்த மருத்துவத்தில் பத்தியம் என்றால் பெரிய வார்த்தையாக மக்கள் காண்கிறனர், ஆனால் இங்கு பத்தியமகா கூறுவதோ நம் நாட்டு உணவு வகைகளைதான் ஆனால் அதில்  கொஞ்சம் வித்யாசம், அது எப்படி என்றால் சில நோய்களுக்கு காய்கறிகளை முற்றியதாக உணவில் சேர்க்க சொல்லாமல் பிஞ்சாக எடுக்க கூறுவோம். உதாரணம் கத்தரி பிஞ்சு,முருங்கை பிஞ்சு,அவரை பிஞ்சு போன்றன வாத நோய்க்கு சிறந்த பத்திய உணவு.வாழை கச்சல் சர்க்கரை நோய்க்கு சிறந்த பத்திய உணவு.



என்னிடம் வருபவர்கள் சிலர் சித்த மருத்துவத்தில் பத்தியம் சொல்விங்க சார் அதான் நிறைய பேர் உங்க மருத்துவத்த விரும்பமாட்டங்கிறாங்க என்று கூறுவார்கள்,எனக்கு சிரிப்பாக இருக்கும்,ஆனால்  சித்த மருத்துவத்தில் கூறும்  பத்திய முறை போலதான் தற்காலத்திய  Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இருக்கிறது,அனால் எனது பார்வையில் பத்திய முறையே என்பது  இதை விட மேம்பட்டதாக கருதுகிறேன்.பழைய சாதம் எப்படி Inflammatory Bowel Disease நோய்க்கு சிறந்ததோ, அப்படி பல உணவு வகைகள் பத்திய உணவாக  சித்த மருத்துவத்தில் உள்ளன.

சித்த மருத்துவத்தில் நவீன ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் பலவகையான Medically Tailored Meal, Nutraceuticals, Functional Foods இந்த உலகுக்கு கிடைக்கும்.

   

தொடரும் ….



செவ்வாய், 24 ஜனவரி, 2023

உணவா? மருந்தா? நஞ்சா? - சித்த மருத்துவம்

          இந்த கட்டுரையில் நம் உணவு பட்டியலில்  உள்ள பாரம்பரிய உணவுகள் மற்றும் தற்கால உணவு வகைகளின் இருக்கிற  மருத்துவ தன்மை, அறிவியல்,அரசியல் பின்புலம்,வரலாறு போன்றவை பற்றி தொடர்களாக காண உள்ளோம்.

     தற்போதைய காலகட்டத்தில் உணவே மருந்து என்ற நோக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது மக்கள் செயற்கையாக செரிவு செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து வருகின்றனர் மேற்கத்திய நாட்டு மக்கள், பங்க்ஷனல் புட்ஸ்சை (Functional Foods),ஊட்டச்சத்து மருந்துகளை (Nutraceuticals) பெரிதும் விரும்பி உண்கின்றனர்.

முதலில் functional food என்றால் என்ன

         எந்த உணவானது உடலிற்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றை தருவதோடு அல்லாமல், உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை மாற்றி அமைத்து,உடலியலின் தன்மையை மேம்படுத்துகிறதோ அல்லது நோயால் வரும் ஆபத்தை குறைக்கிறதோ அது Functional Foods என்று அழைக்கப்படும்.

Nutraceuticals என்றால் எனன் ?

      Nutraceuticals என்றால் இது உணவு பொருள், ஆனால் ஒரு நோயை போக்கும் மருந்தின் செயல் திறன் இதற்கு இருக்கும்,ஆனால் இது மருந்து என்ற பட்டியலில் இடம் பெறாது.

             புரியவில்லையா ,அட நம்ப வீட்டு தோட்டம்,அடுப்பங்கரையில இருக்க இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழ இத பத்திதான் நான் பேசறேன்.



             இன்னும் ஒரு உதாரணத்தோடு கூறுகிறேன் இஞ்சியை நாம் காலை எழுந்தவுடன் டீயில் போட்டு இஞ்சி டீயாக குடிப்பது, இஞ்சி பூண்டு பேஸ்டாக மட்டன் குருமாவில் சேர்ந்து உணவாக சேர்ப்பது, இப்படி சேர்ப்பதால் நமக்கு வயிற்றில் வாயு தொல்லை நீங்கி உணவு சீரணம் உண்டாக்கும் என்று நமக்கு தெரியும்,அப்போது இஞ்சி நமக்கு ஒருவகையில் functional food டாக செயல்பாடுகிறது,இதே இஞ்சியை சாறு எடுத்து,தேன்,கருப்பட்டி சேர்த்து டானிக்காக, இருமல் நோய்க்கு உண்டால் Nutraceuticals சாக செயல்படும், இந்த இஞ்சியை இன்னும் பக்குவப்படுத்தி கற்பமாக உண்டால் நரை-திரை-மூப்பின்றி வாழலாம் அதாவது anti ageing தன்மை உள்ளதாக இது இருக்கும்,இங்கு நாம் காணும் பொருட்கள் தனியாக கண்டால் உணவுகள், மூன்று ஒன்று சேர்ந்தால் கபத்தை போக்கும் இருமல் டானிக்.

             இதில் இருந்துதான் சித்த மருத்துவம் அல்லது மக்கள் பாசையில் நாட்டு மருத்துவம் உருவாகுகிறது, இது எப்படி உருவானது என்பது வேறு கதை அதை பிறகொரு கட்டுரையில் பார்போம்.இப்போது விசயத்திற்கு வருவோம் இப்படி பல பல மருந்துகள் நம் வீட்டிலும் மற்றும் தோட்டத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.இதை  முன்னோர்கள் உணவே மருந்து என்று கூறி சென்று விட்டார்கள், நாமும் உணவே மருந்து என்ற கலாச்சாரம் மறந்து, நுகர்வு உணவு கலாச்சாரத்தில் நோக்கி செல்ல தொடங்கிவிட்டோம்,மேலை நாடுகளில்  தற்போது Functional Foods, Nutraceuticals என்று நம் நாட்டு உணவுகள் வேறு பெயர்களில் பிரபலமாகி வருகிறது.

           2016 வந்த ஆய்வறிக்கை ஒன்றில் உலக நாடுகளில் எந்த எந்த நாடுகள் functional food சை அதிகம் விரும்பி உண்கின்றனர் என்ற ஆய்வு அறிக்கையில் ஐரோப்பிய,ஸ்பெயின்,பின்லாந்து,நெதர்லாந்து,ஸ்வீடன்  போன்ற நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன, இந்த உணவுக்கான சந்தை அதிக அளவில் உள்ள நாடுகளில் ஜப்பான்,கொரியா, அமெரிக்கா இவைகள் முன்னிலையில் உள்ளன, இந்த பட்டியலில், இந்திய தெற்கு ஆசியாவில் மட்டும் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.


ஏன் இந்த வேறுபாடு ?


              2022 ல் உலகளவில் Functional Foods மற்றும் இயற்கை உணவு பொருட்களின் சந்தை என்பது 22.4 பில்லியன் அமெரிக்க டாலர். வளர்ந்த மேலை நாடுகள்  தங்கள் உணவுகளை நல்ல  தரமாக உண்பதில் ஆர்வம் உள்ளவராக உள்ளனர்,அதற்கு ஏற்ற விலை தரவும் அவர்கள் தயார்,அனால் நமது நாடு அதற்கு மாறானது, இதுதான் இங்கு வித்தியாசம். மேலை நாடுகளில் Functional Foods, Nutraceuticals என்று பிரபலமாக உள்ளவை Probiotics Curd, Broccoli, Soya Milk போன்ற இன்னும் பல, இதில்  நம் கவனத்தை ஈர்க்கும் பொருள் என்ன என்றால், Probiotic curd இது ஒரு  தயிர்,ஆனால் இதில் நம் குடலிற்கு நன்மை செய்யக்கூடிய நூண்ணுயிரிகள் அதிக அளவில் உள்ளது.அனால் இந்த நூண்ணுயிரிகள் நம் வீட்டில் உள்ள தயிரில் மிக குறைந்த அளவே உள்ளது , இவ்வகை Probiotic நூண்ணுயிரிகள் நமது குடலை வழுவுப்படுத்தி நோய் உண்டாக்கும் நூண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும், வயிரே அனைத்து நோய்களுக்கும் பிரதானம் என்ற கருத்து சித்த மருத்துவத்தில் உள்ளது, இப்படிப்பட்ட வயிரை வலுப்படுத்தி உடலை காக்கும் செயலை நம் கண்ணுக்கு தெரியாத இந்த நூண்ணுயிரிகள் செய்கின்றன.


              

 இந்த வகை தயிர்  தற்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது ஒரு கப் ரூபாய் 40 முதல் 50 வரை விற்க்கப்படுகிறது, இப்படி விற்கப்பட்டும் probiotics நமது அன்றாட உணவிலே உள்ளது, இந்த உணவு உங்கள் பலருக்கு பரிச்சயமனா உணவு பொருள்தான், அதுதான்  பழைய சாதம், சென்னை Stanley மருத்துவ கல்லூரியில் நடத்திய ஆய்வில் பழைய சாதத்தை தங்கம் என குறிப்பிட்டுள்ளானர்,இதில் குடலிற்க்கு நன்மை செய்யும் probiotics நூண்ணுயிரிகள் அதிகம் உள்ளதாகவும் , Inflammatory Bowel Disease (குடல் அழற்சி நோய்  என்று கூறலாம்), நோய்க்கு சிறந்த உணவாக இருப்பதோடு இல்லாமல், Inflammatory Bowel Disease  உள்ள நோயாளிகள் நோய் தீவிரம் அடைந்தால்  குடல் புண்கள் பெரிதாகி குடலில் துளை உண்டாகிவிடும்,இது ஒரு ஆபத்தான கட்டமாகும் இந்த நிலைக்குள் அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி,ஆனால் பழைய சாதம் எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு மேற்கண்ட அளவுக்கு நோய் தீவிரம் உண்டாக்காமல் பழைய சாதம் தடுகிறதாம்.இதனால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு பெரிய பொருள் செலவு தவிர்க்கப்படுகிறது. இதே நோய்களுக்கு probiotics தயிரும் நன்மை தருவதாக கூறும் பல ஆய்வுகள் உள்ளது.

சித்த மருத்துவம் பழைய சாதம் பற்றி என்ன கூறுகிறது ?


''பழஞ்சோற்றை யந்தப் பழைய நீரா காரக்

கொழுஞ்சேர்க்கை யோடுதயங் கொள்ளில் -எழுந்தாது

பித்தவா தம்போம் பெரும்பசியா மெய்யெங்கும்

மெத்தவொளி வுண்டாகுமே''

                                                                                                அகு

இரவில் சாதத்தில் நீர் ஊற்றி காலையில் சூரிய உதயத்தில் அந்த (பழைய சாதம்) நீராகாரத்தை   உண்டால் சுக்கில விருத்தி உண்டாகும்,உதராக்கினி (உடல் சூடு) சீராகும், உடல் முழுவதும் ஒரு ஒளி உண்டாகும், பைத்திய வாதம் போய் அறிவு தெளிவு போன்றவை உண்டாகும்.

            பட்டை திட்டப்படாட  சம்பா அரிசி அல்லது பொன்னி அரிசி அல்லது முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த அரிசியில் இந்த நீராகாரத்தை நாம்  செய்யலாம்.


 இப்போது எதற்கு இந்த அறிவுரை?

             மேற்கண்ட பழைய சாதத்தை பற்றிய செய்தி பல பேர் முன்பே அறிந்த ஒன்றாக இருக்கலாம், இப்படி பல பல உணவு வகைகளை நாம் இன்னும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்.மார்கெட்டில் டப்பாவில் அடைத்து வைத்து விற்கப்படும் ஒன்று நம் வீட்டின் அடுப்பங்கரையிலே உள்ளது.இதைதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஆராய்ச்சி செய்ய தொடங்கி உள்ளனர்.இந்த பழைய சாதம் 5 star ஹோட்டலில் ரூபாய் 2455 விற்க்ப்படுவதாக நான் கேள்விப்பட்டேன், இது சிலருக்கு நகைப்புக்குறிய செய்தியாக தோன்றலாம்,ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோமா, தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் செய்தி அப்போது நகைப்புக்குறிய செய்தியாக இருந்தது, இப்போது நிலைமை வேறு.நோய் வராமல் இருக்கவும், நோய்களுக்கு மருந்து நம் வீட்டில் இருந்து தொடங்குகிறது,அதிலிருந்துதான் நம் சித்த மருத்துவமும் தொடங்குகிறது, நோய்களுக்கு மருந்து தரும் சித்த மருத்துவரும்  Functional Foods, Nutraceuticals சைதான் நமக்கு  பத்தியமாக கூறுகின்றார்.


சரிப்பா நீராகாரத எப்படி செய்யரது ?

 

சூரிய வெப்பம் அதிகம் உள்ள கோடை காலத்தி தண்ணீர் ஊற்றியதில் இருந்து சுமார் 6-8 மணி நேரம் ஊறவிட்டால் போடும்,மற்ற காலங்களில் 8-12  மணி நேரம் ஊறவிட வேண்டும்,இப்படி ஊறவிடுவதால் நமக்கு தேவையான நூண்ணுயிரிகள் வளர்ந்துவிடும்.இப்படி செய்யும் பழைய சாதம் மண்பானையில் வைத்து செய்தல் இன்னும் நன்மையாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.


தொடரும்….,


நன்றி,

 மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி, காவேரி சித்த கிளினிக் சேலம்,877-858-7349




செவ்வாய், 3 ஜனவரி, 2023

மாட்டு இறைச்சியும் தமிழ் மருத்துவமும் - மாட்டு இறைச்சியைப்பற்றி தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மருத்துவம் எவ்வாறு விளக்குகிறது

  தமிழ் இலக்கியங்களில் மாட்டு இறைச்சியைப்பற்றிய சில விவரங்கள்:

     இவ்வுலகில் வாழும் பாக்டீரியா முதல் திமிங்கிலங்கள் வரை  புறச் சூழல், வாழ்வியல் சூழல், ஏதுவான சூழல் சார்ந்தே தத்தமது உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்கின்றன. 
ஒருவரின் உடை மற்றும் உணவுப்  பழக்கம் அவரது உரிமையும் விருப்பமும் சார்ந்த ஒன்றே.
 தற்போது‌ பல விவாதங்களை அடைந்து வருகின்ற மாட்டு  இறைச்சி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று  என்பது மட்டும் அல்லாமல் தற்போதும் தமிழகத்தின் உணவிலும் மற்றும் நம் நாட்டு ஏற்றுமதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

மாட்டு இறைச்சி பற்றி சங்க காலம் நமக்கு கூறுவது என்ன?
சங்க காலப் பாடல்களில் ஒன்று.
வய வாள் எறிந்து,
வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய
கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை….”
அகநானூறு – 309

பசுவை உண்ணல்:
பசுவினைப் பலியை பற்றி செய்தி அகநானூற்றில் காணப்படுகிறது. 
பசு புனிதமாகவும் தெய்வமாகவும் கருதப்படுவதற்கு முன்னர் உணவிற்காகப் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு பசு உணவிற்காகப் பயன்படுத்தப் படுவதைப்
 பின்வரும் நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது.

    
            வெட்சி வீரர்கள் பால்தரும் பசுக்கூட்டத்தை கவர்ந்து சென்ற  கரந்தை வீரர்களைக் கொன்று பசுவை கொண்டுச் சென்றனர்.போகும் வழியில் அவர்களுக்கு பசிக்கவே, கொண்டுச் சென்ற பசுக்களில் கொழுத்தது எது என பார்த்து அதை வெட்டி சமைத்து உண்டார்களாம் (அகம்:309) 
            எருதினைக் கொன்று அதன்    தொடையினை உண்ணல் (அகம்:265) போன்ற செய்திகள்இலக்கியங்களில் காணமுடிகிறது. 
               பசு வதை மற்றும் அதை உணவாக பயன்படுத்துவது போன்ற செய்திகள் நமக்கு கிடைக்க
பெற்றாலும்.மணிமேகலையில் போன்ற நூலில் உயிர்க்கொலை கூடாது,பசுவை கொல்லக் கூடாது போன்ற செய்திகள்இடம்பெறுகிறது."
                ஆனாலும், இன்றும் பசுவை கொன்று உண்ணும் பழக்கம் நம் தமிழகத்தில் இருந்துவருகிறது.
இருந்தாலும் சிலர் இதை உண்பதை தவிர்க்க தான் செய்கிறார்கள்.
     ‌‌           சங்கப் பாடல்களில் “ஊன்” உணவு பற்றிய செய்திகள் நிறையவே வருகின்றன,யானை,புலி முதலியவைகளை உண்ட வரலாறு கூட உண்டு.
                முக்கியமாகப் பசுவைக் கொன்று தின்ற செய்தி பழைய பாடல் களில்காணப்படுகிறது.

'புலையன் ஆவுரித்துத் தின்றான். பாணன் கன்றை உரித்துத் தின்றான். (நற்3-9) வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர்". (அகம் 129

"சிறுபாணாற்றுப்படை” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” எனக் கூறும் "(175-77) 

                  இங்கு விருந்தாளிகளுக்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச்   சோறும் கொடுத்த செய்தி விவரிக்கப்படுகிறது.
                 உழவர் பெருமக்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு (129)நன்னூல் உரையில் பாணர் பசு இறைச்சியைத் தின்ற செய்தி வருகிறது. (சூத் 310) 
பசுவைக் கொன்று பாறையில் அதன் இறைச்சியைக் காய வைத்த ஒரு நிகழ்ச்சியை அகநானூறுல் இடம்பெற்றுள்ளது (390).
           மேற்கண்டவை மூலம் தமிழ் நாம் அறிவது தமிழ் மக்கள் பசு  தெய்வமாகவும்,அதன் மூலம் கிடைக்கும் பொருள்களை உணவாகவும்,இதர தேவைகளுக்கும் பயன்படுத்தினர் என்று அறியப்படுகிறது.

சரி தமிழ் மருத்துவம் மாட்டு இறைச்சியைப்பற்றி என்ன கூறுகிறது:

மாட்டு இறைச்சியின் குணம்:
              மேலே கொடுக்கப்பட்டுள்ளது பாடல் மற்றும் விளக்கம் பதார்த்த குண விளக்கம் என்ற நூலில் இருந்து கிடைக்கப்பெற்றது,இதில் மாட்டின் இறைச்சி உண்பவருக்கு சகல நோய் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 சரி மாட்டின் பால்,நெய்,கோமூத்திரம், சாணம், தயிர்,நெய் இதை பற்றி தமிழ் மருத்துவம் என்ன  கூறி உள்ளது.

பசும் பாலின் குணம்:
பசு மூத்திரம் குணம்:
பசு நெய் குணம்:
பசு வெண்ணெய் குணம்:
பசு மோரின் மருத்துவ குணம்:
பசு சாணத்தின் மருத்துவ குணம்:
  மாட்டின் பால், தயிர்,நெய், சாணம்,கோமூத்திரம் போன்றவை மருத்துவ குணம் பெற்றது என்பது இவற்றில் சில  அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டது .
        மாட்டின் இறைச்சி சகல நோய்களை உண்டாக்கும் எனவும்,
 அதன்  இறைச்சி தவிர்த்து இன்ன பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாக பதார்த்த குண விளக்கம் நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மக்களின் இறைச்சி வகையுள் மாட்டு இறைச்சி இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது,மாட்டின் இறைச்சி அப்படி சகல நோய்களையும் உண்டாக்கும் என்றால் அதற்கான நவின ஆராய்ச்சி முடிவுகள் அவசியம்.

நன்றி
மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி
தொடர்புக்கு 8778587349.
இக்கட்டுரை எழுத ஆதாரம்:
1)https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4589:2018-06-14-12-06-16&catid=65:2014-11-23-05-26-56
2)http://fbtamildata.blogspot.com/2017/09/2_21.html?m=1
3) பதார்த்த குண விளக்கம் -காசீம் முகைதீன் ராவுத்தர் 
4)நோய் இல்லா நெறி டாக்டர்- மருத்துவர் கோ துரைராசன்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

பஞ்ச முட்டி கஞ்சி

                பஞ்ச முட்டி கஞ்சி

"பஞ்சமுட்டிக் கஞ்சிநெடும் பட்டினிற் 
கொள்ளுங்கால் விஞ்சனில பித்தகபம் வீறாவாம் - விஞ்சு மிளைப்பகற்றுந் தாரக விலங்கணத்திற் கேற்குந் திளைப்ப வெழும் பூண்முலையே செப்பு"
      -பதார்த்தகுண சிந்தாமணி 1407

பஞ்ச முட்டி கஞ்சியின் சிறப்பு:

புரதம், ஊட்டச்சத்து குறைந்த நோயாளிகளின் உடல் தேற பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து பானம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 5 கிராம், உளுந்து 5 கிராம், சிறுபயறு 5 கிராம், துவரம் பருப்பு 5 கிராம், கடலை பருப்பு 5 கிராம், தண்ணீர் 500 மிலி துணி - 1

செய்முறை:

அனைத்து பொருட்களையும் தனித்தனியே லேசாக வறுத்து பின்னர் சுத்தமாக துணியில் தனித்தனியே முடிந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மண் பாத்திரத்தில் 500 மிலி தண்ணீர் விட்டு 8ல் ஒரு பங்காக சுண்ட காய்ச்சி முடிச்சை பிழிந்து எடுத்து விட்டு கஞ்சியை உண்ணவும்.

-சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
நன்றி.
facebook:
https://www.facebook.com/profile.php?id=100088792723019&mibextid=ZbWKwL