செவ்வாய், 24 ஜனவரி, 2023

உணவா? மருந்தா? நஞ்சா? - சித்த மருத்துவம்

          இந்த கட்டுரையில் நம் உணவு பட்டியலில்  உள்ள பாரம்பரிய உணவுகள் மற்றும் தற்கால உணவு வகைகளின் இருக்கிற  மருத்துவ தன்மை, அறிவியல்,அரசியல் பின்புலம்,வரலாறு போன்றவை பற்றி தொடர்களாக காண உள்ளோம்.

     தற்போதைய காலகட்டத்தில் உணவே மருந்து என்ற நோக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது மக்கள் செயற்கையாக செரிவு செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து வருகின்றனர் மேற்கத்திய நாட்டு மக்கள், பங்க்ஷனல் புட்ஸ்சை (Functional Foods),ஊட்டச்சத்து மருந்துகளை (Nutraceuticals) பெரிதும் விரும்பி உண்கின்றனர்.

முதலில் functional food என்றால் என்ன

         எந்த உணவானது உடலிற்கு தேவையான ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றை தருவதோடு அல்லாமல், உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயல்களை மாற்றி அமைத்து,உடலியலின் தன்மையை மேம்படுத்துகிறதோ அல்லது நோயால் வரும் ஆபத்தை குறைக்கிறதோ அது Functional Foods என்று அழைக்கப்படும்.

Nutraceuticals என்றால் எனன் ?

      Nutraceuticals என்றால் இது உணவு பொருள், ஆனால் ஒரு நோயை போக்கும் மருந்தின் செயல் திறன் இதற்கு இருக்கும்,ஆனால் இது மருந்து என்ற பட்டியலில் இடம் பெறாது.

             புரியவில்லையா ,அட நம்ப வீட்டு தோட்டம்,அடுப்பங்கரையில இருக்க இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழ இத பத்திதான் நான் பேசறேன்.



             இன்னும் ஒரு உதாரணத்தோடு கூறுகிறேன் இஞ்சியை நாம் காலை எழுந்தவுடன் டீயில் போட்டு இஞ்சி டீயாக குடிப்பது, இஞ்சி பூண்டு பேஸ்டாக மட்டன் குருமாவில் சேர்ந்து உணவாக சேர்ப்பது, இப்படி சேர்ப்பதால் நமக்கு வயிற்றில் வாயு தொல்லை நீங்கி உணவு சீரணம் உண்டாக்கும் என்று நமக்கு தெரியும்,அப்போது இஞ்சி நமக்கு ஒருவகையில் functional food டாக செயல்பாடுகிறது,இதே இஞ்சியை சாறு எடுத்து,தேன்,கருப்பட்டி சேர்த்து டானிக்காக, இருமல் நோய்க்கு உண்டால் Nutraceuticals சாக செயல்படும், இந்த இஞ்சியை இன்னும் பக்குவப்படுத்தி கற்பமாக உண்டால் நரை-திரை-மூப்பின்றி வாழலாம் அதாவது anti ageing தன்மை உள்ளதாக இது இருக்கும்,இங்கு நாம் காணும் பொருட்கள் தனியாக கண்டால் உணவுகள், மூன்று ஒன்று சேர்ந்தால் கபத்தை போக்கும் இருமல் டானிக்.

             இதில் இருந்துதான் சித்த மருத்துவம் அல்லது மக்கள் பாசையில் நாட்டு மருத்துவம் உருவாகுகிறது, இது எப்படி உருவானது என்பது வேறு கதை அதை பிறகொரு கட்டுரையில் பார்போம்.இப்போது விசயத்திற்கு வருவோம் இப்படி பல பல மருந்துகள் நம் வீட்டிலும் மற்றும் தோட்டத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறது.இதை  முன்னோர்கள் உணவே மருந்து என்று கூறி சென்று விட்டார்கள், நாமும் உணவே மருந்து என்ற கலாச்சாரம் மறந்து, நுகர்வு உணவு கலாச்சாரத்தில் நோக்கி செல்ல தொடங்கிவிட்டோம்,மேலை நாடுகளில்  தற்போது Functional Foods, Nutraceuticals என்று நம் நாட்டு உணவுகள் வேறு பெயர்களில் பிரபலமாகி வருகிறது.

           2016 வந்த ஆய்வறிக்கை ஒன்றில் உலக நாடுகளில் எந்த எந்த நாடுகள் functional food சை அதிகம் விரும்பி உண்கின்றனர் என்ற ஆய்வு அறிக்கையில் ஐரோப்பிய,ஸ்பெயின்,பின்லாந்து,நெதர்லாந்து,ஸ்வீடன்  போன்ற நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன, இந்த உணவுக்கான சந்தை அதிக அளவில் உள்ள நாடுகளில் ஜப்பான்,கொரியா, அமெரிக்கா இவைகள் முன்னிலையில் உள்ளன, இந்த பட்டியலில், இந்திய தெற்கு ஆசியாவில் மட்டும் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது.


ஏன் இந்த வேறுபாடு ?


              2022 ல் உலகளவில் Functional Foods மற்றும் இயற்கை உணவு பொருட்களின் சந்தை என்பது 22.4 பில்லியன் அமெரிக்க டாலர். வளர்ந்த மேலை நாடுகள்  தங்கள் உணவுகளை நல்ல  தரமாக உண்பதில் ஆர்வம் உள்ளவராக உள்ளனர்,அதற்கு ஏற்ற விலை தரவும் அவர்கள் தயார்,அனால் நமது நாடு அதற்கு மாறானது, இதுதான் இங்கு வித்தியாசம். மேலை நாடுகளில் Functional Foods, Nutraceuticals என்று பிரபலமாக உள்ளவை Probiotics Curd, Broccoli, Soya Milk போன்ற இன்னும் பல, இதில்  நம் கவனத்தை ஈர்க்கும் பொருள் என்ன என்றால், Probiotic curd இது ஒரு  தயிர்,ஆனால் இதில் நம் குடலிற்கு நன்மை செய்யக்கூடிய நூண்ணுயிரிகள் அதிக அளவில் உள்ளது.அனால் இந்த நூண்ணுயிரிகள் நம் வீட்டில் உள்ள தயிரில் மிக குறைந்த அளவே உள்ளது , இவ்வகை Probiotic நூண்ணுயிரிகள் நமது குடலை வழுவுப்படுத்தி நோய் உண்டாக்கும் நூண்ணுயிரிகளை கட்டுப்படுத்தி உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும், வயிரே அனைத்து நோய்களுக்கும் பிரதானம் என்ற கருத்து சித்த மருத்துவத்தில் உள்ளது, இப்படிப்பட்ட வயிரை வலுப்படுத்தி உடலை காக்கும் செயலை நம் கண்ணுக்கு தெரியாத இந்த நூண்ணுயிரிகள் செய்கின்றன.


              

 இந்த வகை தயிர்  தற்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது ஒரு கப் ரூபாய் 40 முதல் 50 வரை விற்க்கப்படுகிறது, இப்படி விற்கப்பட்டும் probiotics நமது அன்றாட உணவிலே உள்ளது, இந்த உணவு உங்கள் பலருக்கு பரிச்சயமனா உணவு பொருள்தான், அதுதான்  பழைய சாதம், சென்னை Stanley மருத்துவ கல்லூரியில் நடத்திய ஆய்வில் பழைய சாதத்தை தங்கம் என குறிப்பிட்டுள்ளானர்,இதில் குடலிற்க்கு நன்மை செய்யும் probiotics நூண்ணுயிரிகள் அதிகம் உள்ளதாகவும் , Inflammatory Bowel Disease (குடல் அழற்சி நோய்  என்று கூறலாம்), நோய்க்கு சிறந்த உணவாக இருப்பதோடு இல்லாமல், Inflammatory Bowel Disease  உள்ள நோயாளிகள் நோய் தீவிரம் அடைந்தால்  குடல் புண்கள் பெரிதாகி குடலில் துளை உண்டாகிவிடும்,இது ஒரு ஆபத்தான கட்டமாகும் இந்த நிலைக்குள் அறுவை சிகிச்சை செய்வதுதான் ஒரே வழி,ஆனால் பழைய சாதம் எடுத்து கொள்ளும் நோயாளிகளுக்கு மேற்கண்ட அளவுக்கு நோய் தீவிரம் உண்டாக்காமல் பழைய சாதம் தடுகிறதாம்.இதனால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு பெரிய பொருள் செலவு தவிர்க்கப்படுகிறது. இதே நோய்களுக்கு probiotics தயிரும் நன்மை தருவதாக கூறும் பல ஆய்வுகள் உள்ளது.

சித்த மருத்துவம் பழைய சாதம் பற்றி என்ன கூறுகிறது ?


''பழஞ்சோற்றை யந்தப் பழைய நீரா காரக்

கொழுஞ்சேர்க்கை யோடுதயங் கொள்ளில் -எழுந்தாது

பித்தவா தம்போம் பெரும்பசியா மெய்யெங்கும்

மெத்தவொளி வுண்டாகுமே''

                                                                                                அகு

இரவில் சாதத்தில் நீர் ஊற்றி காலையில் சூரிய உதயத்தில் அந்த (பழைய சாதம்) நீராகாரத்தை   உண்டால் சுக்கில விருத்தி உண்டாகும்,உதராக்கினி (உடல் சூடு) சீராகும், உடல் முழுவதும் ஒரு ஒளி உண்டாகும், பைத்திய வாதம் போய் அறிவு தெளிவு போன்றவை உண்டாகும்.

            பட்டை திட்டப்படாட  சம்பா அரிசி அல்லது பொன்னி அரிசி அல்லது முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த அரிசியில் இந்த நீராகாரத்தை நாம்  செய்யலாம்.


 இப்போது எதற்கு இந்த அறிவுரை?

             மேற்கண்ட பழைய சாதத்தை பற்றிய செய்தி பல பேர் முன்பே அறிந்த ஒன்றாக இருக்கலாம், இப்படி பல பல உணவு வகைகளை நாம் இன்னும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்.மார்கெட்டில் டப்பாவில் அடைத்து வைத்து விற்கப்படும் ஒன்று நம் வீட்டின் அடுப்பங்கரையிலே உள்ளது.இதைதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஆராய்ச்சி செய்ய தொடங்கி உள்ளனர்.இந்த பழைய சாதம் 5 star ஹோட்டலில் ரூபாய் 2455 விற்க்ப்படுவதாக நான் கேள்விப்பட்டேன், இது சிலருக்கு நகைப்புக்குறிய செய்தியாக தோன்றலாம்,ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கினோமா, தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் செய்தி அப்போது நகைப்புக்குறிய செய்தியாக இருந்தது, இப்போது நிலைமை வேறு.நோய் வராமல் இருக்கவும், நோய்களுக்கு மருந்து நம் வீட்டில் இருந்து தொடங்குகிறது,அதிலிருந்துதான் நம் சித்த மருத்துவமும் தொடங்குகிறது, நோய்களுக்கு மருந்து தரும் சித்த மருத்துவரும்  Functional Foods, Nutraceuticals சைதான் நமக்கு  பத்தியமாக கூறுகின்றார்.


சரிப்பா நீராகாரத எப்படி செய்யரது ?

 

சூரிய வெப்பம் அதிகம் உள்ள கோடை காலத்தி தண்ணீர் ஊற்றியதில் இருந்து சுமார் 6-8 மணி நேரம் ஊறவிட்டால் போடும்,மற்ற காலங்களில் 8-12  மணி நேரம் ஊறவிட வேண்டும்,இப்படி ஊறவிடுவதால் நமக்கு தேவையான நூண்ணுயிரிகள் வளர்ந்துவிடும்.இப்படி செய்யும் பழைய சாதம் மண்பானையில் வைத்து செய்தல் இன்னும் நன்மையாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.


தொடரும்….,


நன்றி,

 மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணமூர்த்தி, காவேரி சித்த கிளினிக் சேலம்,877-858-7349




0 comments:

கருத்துரையிடுக