நாள் முழுவதும் அதிக சோர்வு, கவனக் குறைவு, தூக்கமின்மை, உடல் உறுப்புகளின் கோளாறுகள், உடல் வலி, தலைபாரம் மற்றும் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் , எப்போதும் தூங்கி கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் போன்ற நோய்க் குறிகுணங்களை கொண்டு நிரந்தர மற்றும் நிலையான சோர்வு நிலைக்கு வழி வகுக்கும் நோய். இந்த சோர்வு நோய் ஆறு மாதங்களுக்கு மேலும் நீடிக்குமானால் அதை நாள்பட்ட சோர்வு நோய் நிலை என்று அழைக்கப்படும். பாதிக்கபட்டவரின் வாழ்க்கை தரம் பெரும் அளவில் பாதிக்கப்படும். அதனால், முன்னரே நோயை கண்டறிந்து தக்க மருத்துவம் செய்தால் பாதிக்கப்பட்டவரை மிக எளிதாக குணப்படுத்தலாம்.
காரணங்கள்
இந்த நோய் குறிப்பிட்டு இல்லாமல் பல காரணங்களால் உருவாகலாம் அவை,
1. மரபியல் ரீதியாக ஒரு குடும்பத்திற்கு உள்ளே இந்த நோய் வர வாய்ப்பு அதிகம். உதாரணம் ஒரு தாய்க்கோ அல்லது தந்தைக்கோ இந்த நோய் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் வர வாய்ப்பு அதிகம்.
2. சிலருக்கு சில வகை பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு பிறகு இந்த நோய் நிலை உருவாகும்.
3. உடல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகள் சொல்லபோனால் சாலை விபத்து, அறுவை சிகிச்சை அல்லது நாம் நேசித்த ஒருவரை இழக்கும் போது வரும் உணர்வு ரீதியான பாதிப்புகளை தொடர்ந்து இந்த நோய் உண்டாக்கும்.
4. உணவு முறையில் உள்ள பாதிப்புகளான சரியான சத்தான உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பதும் மற்றும் உணவு வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறு போன்றவை தொடர்ந்து இந்த நோய் நிலையை உண்டாக்கும். மேலும் இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்த்தல் போன்றவற்றால் நமது தூக்க சுழற்சியில் பாதிப்பு உண்டாகி இந்த நோய் நிலை உண்டாகும். மேலும் வைட்டமின் டி என்னும் சத்து குறைபாடு போன்றவை இந்த நோய் உண்டாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று.
5.சிறுவயதினர் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் உண்டாகும். குறிப்பாக, ஆண்களை விடவும் பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
6.ஃபைப்ரோமயால்ஜியா, தைராய்டு சுரப்பி கோளாறு, மன அழுத்த நோய் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குதல் உண்டாகும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
7. திடமான மனநிலை இல்லாதவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
8. அதிர்ச்சிகரமான செய்தி மற்றும் சம்பவங்கள் பார்த்தல் போன்றவை இந்த நோய் நிலையின் குறிகுணங்களை அதிகரிக்கும்.
சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வை சித்தர்கள் சொல்லி வைத்து சென்று உள்ளனர்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அமுக்குரா கிழங்கு சூரணம், திரிகடுகு சூரணம், பிரமி சூரணம் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். நாள்பட்ட நிலையில் உள்ளவர்கள் உள் மருந்துகளுடன் சித்த மருத்துவ புற மருத்துவ சிகிச்சைகளான வேது, பொட்டணம், தொக்கணம், நசியம், யோக மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகளை பெற்று விரைவில் நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
0 comments:
கருத்துரையிடுக