விடிந்ததும் அம்மா எனக்கு கக்கா வரல என்று சொல்லும் குழந்தைகளும், எனக்கு பசியே இல்லை என்று கூறி டிபன் பாக்ஸ் காலி பண்ணாமல் வீட்டிற்கு திரும்பும் குழந்தைளும்,பிரதர் எது சாப்பிட்டாலும் வயிறு மந்தமா இருக்கு என்று கூறும் இளைஞர்கள் இப்படி வயறு,குடல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன.குடல் என்பது நமது செரிமான அமைப்பாகும்,இது நமது வயறு, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளாக பிரிந்துள்ளது. உணவின் சத்தைக் கிரகித்து தேவையற்ற சக்கை பொருட்களை மலமாக வெளியேற்ற நமது குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.ஏனென்றால் உடல் ஆரோக்கியத்தில் நம் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை அதனுள்ளே இடுகிறோம் என்பதை பொருத்தே நமது ஆரோக்கியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அடிக்கடி உண்டாகும் மலச்சிக்கல்,ஆசன வாய் வழியாக வாயு பிரிதல், வயிற்றோட்டம்,நெஞ்சு எரிச்சல்,சிறிது உணவு உண்டாலும் வயிறு மந்தமாதல், உணவு உண்ட சிறிது நேரத்தில் மலம் கழிதல் போன்ற குறிகுணங்கள் இருந்தால் உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணருங்கள். மேலும் எந்தவித உணவு கட்டுப்பாடுகளும்,உடல் பயிற்சிகளும் இல்லாமலும் உங்கள் எடை கூடிக் குறைந்தாலும் உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும். இந்த வகை பிரச்சனை தொடர்ந்து காணப்படும் போது நீங்கள் உண்ணும் உணவின் சத்தை உங்கள் குடல் சரிவர உள்ளே கிரகிக்காமல் போகலாம்.
Gut microbiome:
இந்த காலத்தில் Gut health மற்றும் Gut microbiome என்ற வார்த்தைகள் மிக பேசும் பொருளாக உள்ளது. Gut health என்றால் குடல் ஆரோக்கியம், Gut microbiome என்றால் நமது குடல் பகுதியில் வாழும் பாக்டீரியாக்களை குறிக்கும். நமது குடல் இவற்றிற்கு உலகம் ஒரு உலகம் போன்றது, எண்ணில் அடங்காத கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் அங்கு உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நமது உடலிற்கு நன்மை செய்யக்கூடியவை ஆகும். நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை சரியான முறையில் கட்டமைத்து,சர்க்கரை நோய், இதய நோய், மன நோய்கள், Auto immune disease மற்றும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் ஆற்றல் உடையவை இவை.
அதிகப்படியான மனஅழுத்தம், தூக்கமின்மை, அதிகப்படியான ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளுதல், மேற்கத்திய உணவு கலாச்சாரம் போன்றவை நமது குடல் ஆரோக்கியத்தை பெரிதும் கெடுக்கின்றது.
இப்படிப்பட்ட குடல் ஆரோக்கியமாக இருக்க நமது சித்த மருத்துவத்தில் சிறப்பான வழிகள் உள்ளன.குறிப்பாக குழந்தைகளுக்கு பசியை தூண்டும் விதமாக பஞ்ச தீபாக்கினி சூரணம் உள்ளது. தினமும் உணவுக்கு பின் 2 கிராம் தேனில் கலந்து கொடுத்தால் போதும். உங்கள் குழந்தையின் சீரண சக்தி நன்கு அதிகரிக்கும். இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை அன்றாடம் உணவில் சேரும் குழம்பில் ஒரு ஸ்பூன் சேர்த்து குழம்பு வைப்பது தென் நாட்டினர் வழக்கம். பெரியவர்கள்,அஷ்ட சூரணம் என்னும் சூரணத்தை தினம் 4 கிராம் உணவிற்கு பின் எடுக்க ஜீரண சக்தியை அதிகபடுத்தும்.
அடிக்கடி வயிற்றோட்டம் மற்றும் வயிற்று வலி உள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு தயிர் சுண்டி சூரணம் என்ற சூரணத்தை 2-4 கிராம் அளவு தண்ணீரில் கலந்து கொடுக்க வயிற்றோட்டம் நின்றுவிடும்.மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு மேனித்தைலம் என்ற எண்ணெய் மருந்தை 2-4 மில்லி இரவு படுக்கும் முன் கொடுக்க குழந்தைகளுக்கு நன்கு மலம் கழிவது மட்டுமல்லாமல், வயிற்றில் உள்ள புழுக்களும் சாகும். குழந்தைகளுக்கு மலம் கழியும் போது வரும் கெட்ட நாற்றத்தையும் இது நீக்கும்.பெரியவர்கள், நிலவாகை சூரணம், திரிபலா சூரணம் போன்றவற்றை இரவு நேரம் 1 spoon எடுக்கலாம்.
உணவு முறையில் நமது பாரம்பரிய உணவான பழைய சாதத்தில் அதிகபடியான உடலிற்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளது. அதை நமது உணவு அட்டவணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு probiotic இருக்கும் தயிர்,யோகர்ட் போன்றவற்றை வாங்கி தரலாம், அவை குழந்தைகளுக்கு பிடித்தார் போன்று பல வகையான பழ சுவைகளில் கிடைக்கிறது.மேற்கண்ட பிரச்சனை வராமல் இருக்கவும், நமது குடல் ஆரோக்கியமாக இருக்கவும் சித்த மருத்துவத்தில் பேதி மருத்துவம்(Purgation Therapy) என்ற மருத்துவ முறை உள்ளது. இம்மருத்துவ முறையை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கையாள வேண்டும். இதனை அருகில் உள்ள சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்பெறலாம்.