திருக்குறள்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்- வளிமுதலா எண்ணிய மூன்று

திருமந்திரம்

மறுப்பது உடல் நோய் மருந்தெனெலாகும்- மறுப்பது உளநோய் மருந்தெனச்சாலும்- மறுப்பது இனிநோய் வாராதிருக்க- மறுப்பது சாவையும் மருந்தெனலாமே

திருக்குறள்

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு- பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருமந்திரம்

உடல் வளர்த்தேன்! உயிர் வளர்த்தேன்!

மூலிகை பழமொழிகள்

காலையில் இஞ்சி- கடும்பகல் சுக்கு- மாலையில் கடுக்காய்

வியாழன், 13 ஜூலை, 2023

மருத மரம்-இதய நோய்கான அமிர்தம்

                                       
மருத மரம்

     இது இந்தியாவில் பரவலாக காணப்படும் ஒரு மர வகுப்பை சேர்ந்த தாவரமாகும். மருது அல்லது மருதம் மரத்தை தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் ஸ்தல விருச்சமாக வணங்கி வருகிறோம். ஆறு மற்றும் ஆற்று பாங்கான இடங்களில் வளரும் இயல்பு உடையது. இதன் பட்டை அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்தது. குறிப்பாக, இதய நோய்களுக்கு காலம் தொட்டு இயற்கை மருத்துவத்தில் இந்த தாவரம் பயன்பாட்டில் உள்ளது. இதன் பட்டையில் அதிகப்படியான உயிர்ச் செயல் மூலப்பொருள்கள் உள்ளன. அவை சப்போனின், பிளேவனாய்டு போன்றவை அடங்கும்.
 இதன் தாவரவியல் பெயர் 
 Terminalia Arjuna  
 இதன் குணம் 
    தமரகவெப்பமுண்டாக்கி, உரமாக்கி இதன் செய்கைகள்.  அதாவது
Cardiac tonic என்று கூறலாம். 
    எண்ணற்ற ஆய்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருத மரத்தின் மருத்துவப் பயனை அறிய நடத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக  இதய ரத்த நாள நோய் நிலையில் உள்ள  இதய நோயாளிகளில் பெரிய அளவில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
 இதன் பயன்கள் 
    காஞ்சிபுரம் சுற்றி உள்ள வைத்தியர்கள் மருதம் பட்டையை பொடியாக பொடித்து சிறிது தண்ணிரில் கலந்து ஒற்றைத் தலைவலிக்கு மூக்கில் இரண்டொரு சொட்டு விடுகின்றனர்  மற்றும் சொத்தை பற்க்களில் உள்ள புழுக்களை கொல்ல இந்த முறையை பயன்பாடு செய்கிறார்கள்.
    கேரளாவில் உள்ள மலபார் பழங்குடியினர் காதில் உள்ள வலிகளுக்கு இந்த மரத்தின் இலை சாற்றை இரண்டொரு துளி காதில் விடுகின்றனர் மற்றும் இதன் பட்டையை தமரக நோய்க்கு  பயன்படுத்துகின்றனர்.
    ஒரிசா மாநிலம் சுண்டர்கர்ஹ் மாவட்டதில் வாழும் பழங்குடியினர் இந்த மரத்தின் பட்டையை பொடியாக செய்து அரிசி சுத்தம் செய்த நீரில் கலந்து சீறுநீரில் ரத்தம் வரும் நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
    மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் இதன் பட்டையை பச்சையாக வாயிலிட்டு மென்று அதன் சாற்றை வயிறு புண், நெஞ்சு எரிசல் போன்ற நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பயன் படுத்துகின்றனர்.
    சக்கரடட்டா என்னும் பழங்கால மருத்துவர் இதன் இலை கசாயத்துடன் நெய் கலந்து இதய நோய்களுக்கு பயன்படுத்தும் படி அறிவுறுத்தி உள்ளார் 
    இதன் பட்டை கஷாயம் புண்களை கழுவவும் மற்றும் இதன் இலை சாம்பல் தேள் கடி மற்றும் பாம்பு கடிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.
 இதய நோய்களுக்கான கசாயம் 

    மருதம்பட்டை, அரசம்பட்டை, வில்வப்பட்டை வகைக்கு சம அளவு 

சாதிக்காய், சாதிபத்திரி, இலவங்கப்பட்டை இவை மேற்கண்டவற்றில்  

பாதி அளவு. இவற்றை அரைத்து 5 கிராம் எடுத்து 200 மி.லி நீரில் 

60 மி.லியாக காய்ச்சி வடித்து, காலை மாலை கொடுத்துவர,  

இருதயத்தை வன்மைப்படுத்தி,இருதய நோயாளிகளுக்கு  

சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

 மரத்தில் பட்டையை எடுக்க வேண்டிய முறை: 
    மரத்தில் இருக்கும் மேல் சுற்றி உள்ள பட்டையை மட்டும் உரித்து எடுத்தால் போதும். பின் நிழலில் காயவைத்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சித்த மருந்து கடைகளில் மருதம் பட்டை கசாயம், சூரணம்,  

அரிஷ்டம், மாத்திரை போன்றவை கிடைக்கின்றன. இதை தக்க  

மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்


புதன், 29 மார்ச், 2023

நலம் தரும் எண்ணெய் குளியல்

 நலம் தரும் எண்ணெய் குளியல்: 

தமிழர்களின் பாரம்பரிய முறைகளில் எண்ணெய்  குளியல் அல்லது எண்ணெய்   முழுக்கு மிக முக்கியமானது.

``சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்று நான்கு நாளைக்கு ஒரு முறை எண்ணெய் முழுக்கு எடுக்க வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. குளிர் காலத்தில் வாரம் ஒரு  முறையும், வெயில் காலத்தில் வாரம் இரு முறை எண்ணெய்  முழுக்கு எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை,ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை எண்ணெய் முழுக்கு செய்ய வேண்டும். ஆனால் இந்த பழக்கம் காலமாற்றத்தால் மாறி தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக மாறியுள்ளது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் ?

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் பலம் பெற்று உடலில் எந்த நோயும் வராமல் உறுதிபடும் . உடலின்  அதிக உஷ்ண தன்மை குறைவதால் முடி உதிர்வு பிரச்சனை சீராகி தோல் வறண்டு போகும் பிரச்சனை சீராகிறது. உடலின் ரத்த ஓட்டம் சீராகுவதால் சோம்பல் போன்ற பிரச்சனை தீர்வதோடு, உடலின் குற்றங்கள் அனைத்தும் சீராகிறது.

எந்த எண்ணெய் சிறந்தது ?

நல்லெண்ணெயே மிகவும் சிறந்த எண்ணெய். இது போக விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றையும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணைய்,விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றும் ஒரே அளவாக கலந்து முக்கூட்டு எண்ணெயாக பயன்படுத்தலாம்.மேலும் நோய்களுக்கு ஏற்றவாறு எண்ணெய் முழுக்கு கடைப்பிடிக்க படுகிறது. அதில் நொச்சி தைலம், சுக்கு தைலம் போன்றவை அடங்கும்.

எண்ணெய் குளியல் எப்படி எடுக்க வேண்டும் ?

பாரம்பரிய மருத்துவ முறைப்படி உடலில் உச்சி முதல் பாதம் வரை எண்ணெயை பரவலாக தேய்க்க வேண்டும். அதில் மூன்று துளி காதிலும், இரண்டு துளி மூக்கிலும் விட வேண்டும். பிறகு 30  முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே உடலில் எண்ணெயை ஊறவிட வேண்டும். பிறகு, மூலிகை பொடி போட்ட வெந்நீரில் எண்ணெய் பிசகு போகும் வரை நன்கு குளிக்க வேண்டும். பிறகு சாம்பிராணி போட்டு தலை மற்றும் முடிக்கு தூபம் போட வேண்டும். நல்லெண்ணையில்  வைட்டமின் E  சத்து அதிகம் உள்ளதால் அது உடலின் தோலின் வயதாகும் தன்மையை நிறுத்தி, நம் தோலை பிரகாசம் அடையச் செய்யும்.

சளி பிடிக்காமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யுங்கள் ?

சிலருக்கு எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்கலாம். அதற்கு ஒரு சிட்டிகை மிளகு தூள், ஒரு சிட்டிகை சுக்கு தூள், ஒரு பல் பூண்டு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை  60 மில்லி நல்லெண்ணையில் காய்த்து  எண்ணெய் குளியல் செய்தால் சளி பிடிக்கும் தொந்தரவு இருக்காது.

தலைக்கு தேய்த்து குளிக்க எது சிறந்தது ?

தலைக்கு தேய்த்து குளிக்க சீயக்காய் தான் சிறந்தது. ஷாம்புகளில் அதிக கெமிக்கல் இருப்பதாலும், அவை எண்ணெய் பிசகு சரியாய் போக்காது என்பதாலும் சீயக்காய் தான் சிறந்தது.

உடலிற்கு தேய்த்து குளிக்க  நலங்கு மா,பாசி பயறு மாவு சிறந்தது.

புதியதாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் உடல் சோர்வு, சளி பிடிக்கும் தன்மை இருக்கலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை சரியாக தொடர்ந்து கடைபிடிக்க இதுவும் படி படியாக மறைந்து போகும்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கழுதை பால் என்னும் அமுதம்


      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை, வெயிலில் மழை பெய்தால் கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் என கழுதையை  மையமாக வைத்து பழமொழிகள் உள்ளன.அந்த காலத்தில் வண்ணர்கள்  ஊர் மக்களின் துணி மூட்டைகளை ஆற்றங்கரைக்கு   பொதி சுமப்பதற்கு என்று கழுதையை  பிரத்தியேகமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது வாஷிங் மெஷின் மற்றும் மோட்டார் வாகனங்களும்  இதை ஓரம் தள்ளிவிட்டது. அகநானூற்றில் , உப்பலத்தில் இருந்து உப்பு மூட்டைகளை கடும் வெயில், கரடு முரடான பாதை என்று பாராமல் எடுத்து  செல்ல பயன்படுத்தப் படுகிறது என்று கழுதைகள் பற்றி பாடல் ஒன்று விவரிக்கிறது. உப்பு மட்டும் இன்றி பல்வேறு விளைபொருள்களை கழுதை மீது வைத்து சென்று உள்ளனர். 

                            

                             'வெள்வாய்க் கழுதைப் புல்லினம்' (புறம் 392 ) 

     கழுதையின் வாய் வெள்ளை நிறமாக இருக்கும் என்று புறநானூறு கூறுகிறது. 

    அக்காலத்தில் கழுதையை  வைத்து விவசாயம் செய்ததாக எந்த குறிப்பும் கிடைக்க பெறவில்லை. கழுதையை வைத்து நிலம் உழுவதை இழிவான செயலாக பார்த்தனர். போரில் தோற்றுப்போன மன்னர்களை அவமானம் செய்ய அம்மன்னர்க்கு உட்பட்ட நிலங்களில் கழுதைகளை பூட்டி உழுது வெள்ளை வரகு,கொள்ளு போன்றவை விதைக்கப் பட்டதாக புறநானூறு கூறுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனித நாகரிக வளர்ச்சிக்கு தேவையாக இருந்தாலும், அது சுற்றுச்சூழலுக்கும் , மற்ற உயிர்களுக்கும் இடையூராக உள்ளது. சமீபத்திய ஒரு புள்ளி விவரம் தமிழ்நாட்டில் ஆயிரம் கழுதைகளுக்கு குறைவான கழுதைகள் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. கழுதைகளின் தேவை குறைந்ததால் உணவு  பட்டியலிலே  இல்லாத கழுதைகளை தற்போது ஆந்திர பகுதியுள் உணவாக உண்ண ஆரம்பித்து உள்ளனர்.

    திருச்சி பல்லுயிரி பாதுகாப்பு அறக்கட்டளை Biodiversity conservation foundation விஞ்ஞானி ஏ .குமரகுரு ஹிந்து நாளிதழுக்கு 25, ஜூலை  2020 அன்று கொடுத்த பேட்டியில்  மற்ற விலங்கினங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நம் சமூகத்தில் கழுதைக்கு கொடுப்பது இல்லை. இதுவே இதன் அழிவுக்கு காரணம். சமகாலத்திய அழிவு பட்டியலில் கழுதையும் சேர்ந்து விட்டது.

கழுதை பாலை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்:

    மற்ற கறவை இனங்களில் இருந்து கழுதையானது சற்று வித்தியாசம் படுகிறது. குறிப்பாக பால் கறப்பதில் ஒரு நாளைக்குள் 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் பால் மட்டுமே கறக்கும். கழுதையின் எண்ணிக்கை குறைந்ததால் தற்போது  இதன் ஒரு சங்கு பால், ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை  விற்கப்படுகிறது .இதற்கான காரணம் நம்முடைய புறக்கணிப்பும்  மற்றும் அதன்  பால் தற்போது உலக டாப் கிளாஸ் பாலில் ஒன்றாக விற்கப்படுகிறது .   இத்தாலி நாட்டில் நோய்  பாதித்த குழந்தைகளுக்கு,உடல்  இளைத்த குழந்தைகளுக்கும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கும்  கழுதையின் பால் ஒரு சிறந்த மாற்று பாலாக பயன்படுத்தி வருகின்றனர். 

    இதில் முக்கியமாக மாட்டுப்பால் புரத அல்ர்ஜி (cow milk protein allergies) (CMPA)உண்டாகும் குழந்தைகளுக்கு வெளி நாடுகளில் கழுதை பாலை மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். மாடுகளின் பாலில் உள்ள கொழுப்பு, புரதம், inorganic உப்புகள் கழுத்தை பாலில் குறைவாகவே உள்ளது. ஆனால் மற்ற பாலை விட தாய்ப்பாலுக்கு நிகரான அதிக  அளவு லாக்டோஸ் உள்ளது. இதன் காரணமாக கழுதை பால் இனிப்பாக உள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தாய்ப்பாலை விட உயர்ந்ததாக கழுதை பாலை கூறி உள்ளனர். ஏறக்குறைய தாய் பாலிலும் கழுதை பாலிலும் ஒரு விகிதாச்சார சத்துக்கள் உள்ளன.

    கழுதை பாலில் அதிக அளவு உள்ள லாக்டோஸ் குழந்தைகளின் வயிற்றில் சரியான அளவு கால்சியம் சத்தை உரிய வைத்து குழந்தைகளின் எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.மேலும் குழந்தைகளின் குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள பேட்டி ஆசிட் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்வது மட்டும் அல்லாமல் அவர்களின் மூளை வளர்ச்சியை சீர் செய்து நியாபக ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. பெரியவர்களுக்கு atherosclerosis மற்றும் இதய நோய்   உள்ளவர்களுக்கு இது நோயின் தாக்கத்தை சீர் செய்வதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

சித்த மருத்துவத்தில் கழுதை பால் பற்றி என்ன கூறி உள்ளனர்:

"கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்

 தழுதளையுள் வித்திரதி தானே - யெழுகின்ற

ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிரங்கு 

கட்டியிவை போக்குங் கழறு"

 

"கத்தபத்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்

சித்தப்பிரமை பித்தந் தீருங்காண் - தத்திவரும் 

ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்

செய்ய மடமயிலே செப்பு"

    மிகவும் இனிப்பான கழுதைப்பால் வாதநோய், கரப்பான், புண், தழுதளைநோய், கட்டி, கிரந்தி, சீழ்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புத-ரணம், புத்திமாற்றம், பித்ததோடம், கபநோய் இவை களைப் போக்கும்.மேலும் கழுதை பாலை ஓணான் ரத்தத்துடன் கலந்து கிரந்தி நோய் (Pediatric Heart Disease) பாதித்த குழந்தைகளுக்கு கொடுத்த பழக்கமும் பாரம்பரிய மருத்துவத்தில் உண்டு.

    மேற்கண்ட மருத்துவ பயன்கள் மட்டும் அல்லாமல் கழுதை பாலில் Anti-Microbial,Anti-Viral,Anti-Tumour,Anti-Stress போன்ற மருத்துவ தன்மை உள்ளதாக நவீன ஆய்வுகள் கூறுகிறது.

    இப்படி மருத்துவ பயனை மட்டும் கொண்டிராமல், தோல் சார்ந்த அழகியலுக்கும் இதன் பால் பயன்படுகிறது,உதாரணமாக கிளியோபாட்ரா போன்ற அரசிகள் தங்கள் தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கழுதை பால் குளியல் எடுத்த வரலாறு  எல்லாம் உண்டு. இதில் உள்ள Anti-Agening, Anti-Oxident, Vitamin சத்துகள் வயதாகும் தன்மையை தடுக்கிறதாம். தற்போது ஹாலிவுட் முதல் கோலிவுட் அழகிகள் வரை கழுத்தை பாலில் செய்த Face Cream மை பயன்படுத்துவதாக தகவல். 

    இப்படி பட்ட மருத்துவ குணம் வாய்ந்த கழுதையை  சரியான முறையில் அழிவு பாதையில் இருந்து மீட்டு, அவற்றின்  எண்ணிக்கையை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இதற்கான முறையான ஒரு அமைப்பை அமைத்து கால்நடை துறை பராமரிக்க வேண்டும்.

                                  

              "இப்படி பட்ட கழுதை பாலை அமுதம் என்று சொல்லலாம்"

மருத்துவர் விக்னேஷ் குமார் 877-858-7349