சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிற மருத்துவமனை மற்றும் மருத்துவ குறிப்புகள்
சங்க காலம் தொட்டு கிபி 13ம் நூற்றாண்டுவரை சோழர்கள் தென்னிந்திய பகுதி மட்டும் இன்றி வடக்கு மற்றும் உலகெங்கும் ஆண்ட பெருமை அனைவருக்கும் அறிவோம், தஞ்சை பெரிய கோயில் போன்ற பெரிய ஆலயங்களை கட்டியதோர் அல்லாமல் அவ்வாலயங்களில் மக்களின் பிணி தீர்க்க ஆதுலர் சாலை அதாவது மருத்துவமனை போன்றவற்றையும்அமைத்துள்ளனர்.
இச்செய்திகளை நாம் அறிவதற்கு மிக முக்கியமாக காரணமாக இருந்தவை அக்காலத்தில் நம் முன்னோர்கள் செதுக்கிய கல்வெட்டுகளே ஆகும்.
திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவதுறை, கீரகலூர், கடத்தூர், கூகூர் இனிய ஊர்களில் கிடைக்கப்பெறும் கல்வெட்டுகளில் அக்காலத்து சோழர் பயன்படுத்திய மருத்துவம் பற்றியும் அவர்தம் நடத்திய மருத்துவமனை பற்றியும் விவரங்களை தெரிவிக்கின்றன.
திருமுக்கூடல் ஆதுலர் சாலை
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில். கோவிலில் உள்ள கல்வெட்டில் உள்ள விவரம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு வீர சோழன் ஆதுலர் சாலை என்ற பெயரில் மருத்துவமனை நடந்து வந்துள்ளது, அங்கு பணிபுரிந்த தலைமை மருத்துவர் பெயர் "கோதண்ட ராம அஸ்வத்தாம பட்டன்" என்று மருத்துவமனை வேலை செய்யும் பணியால் பற்றி விவரம் கிடைக்கப்பெறுகிறது, மேலும் இக் கல்வெட்டில் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் எவ்வளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன என்ற விவரத்தோடு எப்படிப்பட்ட உணவுகள் தரப்பட்டன எவ்வளவு மருந்துகள் தரப்பட்டன எவ்வளவு மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டன அந்த மருந்துகளை எப்படி பாதுகாத்தனர் போன்ற விவரங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
அக்காலத்தில் வீரசோழன் ஆதுலர் சாலையில் இரண்டு வகை மருத்துவர்கள் இருந்தனர் ஒருவர் நாடி பார்த்து மருந்து கொடுப்பவர் மற்றொருவர் இரண அறுவை சிகிச்சை செய்பவர்.
அவர்களில் நாடிப் பார்த்து மருந்து கொடுப்பது தலைமை மருத்துவர் "கோதண்ட ராம அசுவத்தாம பட்டன்" இவர் வம்சாவழியாக இத்தொழிலை செய்ய உரிமை பெற்றதோடு இவருக்கு குடையாக 90 கலம் நெல்லும், 80 காசுகளும் அல்லாமல் நிலத்தையும் கொடையாக கொடுத்துள்ளனர், இவ்வாறு மருத்துவத்திற்கு கொடையாக கொடுக்கப்படும் நிலத்திற்கு மருத்துவகாணி என்று பெயர்.
அறுவை மருத்துவம் செய்பவர்கள் பெயர் "சல்லிய கிரியை(Surgeon) பண்ணுவான்", இவருக்கு 30 கலம் நெல்லும்,1 காசும் ஊதியமாக வழங்கப்பட்டது.
இவ்வாறே மருத்துவ பணி செய்யும் மகளிர்(Nurse), செடி விறகு சேகரித்து வருபவருக்கும், நாவிதற்கும் மருந்து மூலிகைகளை சேகரித்து வைப்பவருக்கும் திருமுக்கூடல் மருத்துவமனையில் தொழிலுக்கு ஏற்றவாறு ஊதியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு நாவிதர்கள் சவரத் தொழில் செய்வதோடு சிறு சிறு அறுவை சிகிச்சை செய்த விவரங்களும் கிடைக்கப்படுகிறது.
இங்கு பயன்படுத்திய சில மருந்துகளின் விவரம் உத்தம சரணாதி தைலம்,பஞ்சாக தைலம், கண்டீர மண்டூக, வேதிகா லசுணாதி மேலும் கோவிலில் வேதம்,வான நூல், கட்டடக்கலை, மருத்துவம், போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டுள்ளன,அவற்றோடு மாணவர் விடுதி வசதியும் இருந்துள்ளது.
சுந்தர சோழன் விண்ணகர் மருத்துவமனை
குந்தவை பிராட்டி தன் தந்தையை நினைவாக சுந்தர சோழன் விண்ணகர் ஆதுலர் சாலை மருத்துவமனையை நிறுவி வேலை செய்த மருத்துவருக்கு மருத்துவகாணி வழங்கியதாக கல்வெட்டில் காணப்படுகிறது.
திருப்புகலூர் ஆதுலர் சாலை மற்றும் திருவாவடுதுறை மருத்துவக்கல்லூரி:
விக்ரம சோழனின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிகாலத்தில் திருப்புகலூரில் ஒரு மருத்துவமனை மற்றும் திருவாவடுதுறை ஒரு மருத்துவக் கல்லூரியும் நிறுவியதாக கல்வெட்டுகள் குறிக்கின்றன.
பிணி நீங்க இறை வழிபாடு:
பிணி நீங்க இறைவழிபாடும் கோயில்களில் நடத்தப்பட்டுள்ளன தஞ்சை மாவட்டம் கூகூரில் உள்ள கல்வெட்டில் அதிராஜேந்திரன் தன் பிணி நீங்க வழிபாடு நடத்தப்பட்டதாக காணப்படுகிறது மேலும் கொங்கு நாட்டு மன்னன் சோழ தேவன் உடைய 21 ஆம் ஆட்சி ஆண்டில் அவனுடைய அதிகாரியில் ஒருவரான விக்ரம சோழ திரிபுவன சிங்கத்தேவன் அவரின் மேகப் நோய் தீர்ந்ததால் அவ்வூர் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை அளிக்கப்பட்டதாக கோவை மாவட்டம் கடத்தூரில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
சாதாரணமாக பயிரிடக்கூடிய செங்கழுநீர்(செவ்வாம்பல்)மூலிகையை சோழர் காலத்தில் பயிரிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தர இருந்ததாக காணப்படுகிறது.
வலுதுளை அல்லது வலுதுணை என்ற கண்டங்கத்தரிக்காய் இது கபம் சம்பந்தமான சுவாசக் கோளாறுகளுக்கு பயன்படுத்தும் மூலிகை இது அக்காலத்தில் பயிரிடப்பட்டதாக சேலம் மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டில் காணப்படுகிறது.
நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ணன் மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 8778587349
கட்டுரை எழுத உதவிய நூல்கள்.
1) சோழர் சமுதாயம் புத்தகம் எழுதியவர் முனைவர் வசந்தி.
2) மூலிகை மணி இதழ் ஆசிரியர் க.வேங்கடேசன்.
https://www.facebook.com/profile.php?id=100088792723019&mibextid=ZbWKwL
0 comments:
கருத்துரையிடுக