-புறநானூறு
நன்மையும் தீமையும் கலந்தே இந்த உலகம் படைக்கப்பட்டது, இயற்கை என்பது அழகு என்று நம் நினைவில் உள்ளது, உண்மையில் இயற்கை ஒரு ஒழுங்கின்மை,அதை ஒழுங்கு படுத்தியதின் விளைவாகவே விவசாயம் தோன்றியது.
ஏன் இந்த விரிவுரை என்றால் நாம் பார்க்க போகும் மூலிகை பொருள் அபின்,இதன் அரசியல்,சமூக பயன்பாடுகள், வரலாறு, முக்கியமாக சித்த மருத்துவத்தில் அதன் மருத்துவ பயன் பற்றி நாம் காண்போம்.
தற்போது இந்தியாவில் அபின் பயிரானது மிகவும் கட்டுப்பாடான சூழ்நிலையில் மட்டும் பயிரிடப்படுகிறது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,உத்திர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் சில மாவட்டங்களில் மட்டும் மருத்துவம் மற்றும் அறிவியல் ஆய்விற்காக பயிரிடப்படுகிறது.
இதன் விதைகள் நவம்பர் மாதத்தில் பயிரிடப்பட்டு,பின் மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.இப்படி அறுவடை செய்யப்பட்ட அபின் அதாவது அபின் செடியின் பாலில் இருந்து மார்பின்,கோடின்,டிபேய்ன் போன்ற இரசாயன மூலக்கூறுகள் பிரித்து எடுக்கப்படுகிறது.பின் அதன் காய்களை உலர்த்தி அதன் விதைகள் சேகரிக்க படுகிறது,இதுவே நமது வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள கசகசாவாகும்.
அபின் இந்தியவில் தடை செய்யப்பட்ட போதை பொருள்,
ஆனால் அதன் விதைகளுக்கு நம் நாட்டில் தடையில்லை,கசகசாவிற்கு போதை தரக்கூடிய தன்மை இல்லை,
இது நம் நாட்டில் தடை செய்யப்படவில்லை, ஆனால் விதைகள் மூலம் இந்த செடியை பயிர் செய்ய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இது பல அயல் நாடுகளில் இதன் விதைகள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.விதைகள் எடுக்கப்பட்ட காய்களில் சிறிய அளவில் மார்பின் இருப்பதால் போதைக்கு புகையாக பிடிக்கப் படுகின்றது,இது வட இந்தியாவில் பெரும்சிக்கலாகஉருவெடுத்துள்ளது.சில விவசாயிகள் சட்டத்திற்கு புறம்பாக இதை தனி நபர்களுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
அபின் வரலாறு:
அபினிக்கும் மனித இனத்திற்கு 6000 கால தொடர் பந்தம் இருந்து இருக்க வேண்டும், முதலில் இது எண்ணெய் தாவரமாக தரைக்கடல் பகுதியில் வளர்ந்தது என கருத்துப்படுகிறது.புத்தரின் இமையில் இருந்து அபின் செடி உருவானது என கூறப்படுகிறது.
அபினி யின் வரலாறானது மேற்கத்திய நாடுகளான கிரீஸ்,
கிரித்தே சைப்ரஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற பகுதிகளில் அபினியின் பயன்பாட்டை பற்றி வரலாறு மற்றும் தொல்லியல் எச்சங்கள் கிடைக்கிறது.
இந்தியாவில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு,பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து அபின் வணிகம் நடந்து வந்துள்ளது.பின் வந்த சுதந்திர இந்தியா அபின் பயிரிட மற்றும் விற்க சட்ட திட்டங்களை கொண்டு வந்தது.
இத்தனை நாடுகள் ஏன் அபினை கண்டு அஞ்சி தடை செய்துள்ள காரணத்தை அறிய வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கி பார்க்கவேண்டும்.
முதலாம் அபின் போர்:
சீனாவில் 1644 ஆண்டு பேரரசர் சூங் சென் புகையிலை பயன்பாட்டை அறவே தடை செய்த பிறகு போதைக்காக அபினி பழக்கம் பெருக தொடங்கியது,இதன் விளைவாக சீனாவின் தேவைக்கு பெரும்பாலும் இந்தியாவில் அபினி பயிரிடப்பட்டுள்ள.
இதனை உற்று நோக்கிய பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி இந்த வணிகத்தில் மிகவும் ஆர்வம் காட்டியது. சீனாவில் அபினை இறக்குமதி செய்து அதற்கு மாற்றாக தேயிலையை வாங்கி கிழக்கு இந்திய கம்பெனி, இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளுக்கு விற்பனை செய்தது.1793-ல் பிரிட்டிஷ் அரசு சைனவுடன் அபின் வர்த்தகத்தை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுத்தது ஆனால் அப்போது இருந்து மன்சூ பேரரசு அதை சில காரணங்களால் நிராகரித்து விட்டது.
இதற்கு பின் அபினை கிழக்கு இந்திய கம்பெனி பெருவாரியாக சீனாவுக்கு கடத்த தொடங்கியது.சீன மக்களை அபின் போதைக்கு உட்படுத்தி அவர்களின் உடல் மற்றும் மன நலத்தை கெடுத்து அவர்களின் வேலை செய்யும் ஆர்வத்தை சிறிது சிறிதாக இழக்க வைத்தனர். சீனாவிற்கு உள் வரும் அபினியை அந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, இதன் காரணமாக சீன அரசு பிரிட்டிஷாரின் அபின் சேமிப்பு கிடங்குகளை தீ வைத்து எரித்தது.
இதன் விளைவாக பிரிட்டிஷ் 1840 ஆம் ஆண்டு சீனா மீது போர் தொடுத்தது.இதுதான் முதல் அபின் போர் ,போரின் இறுதியில் சீனா தோல்வி அடைந்தது,பின் அதற்கு ஈடாக சீனாவில் அபின் விற்பனை செய்ய அனுமதியிம்,சில நிலபுலன்களை பிரிட்டிஷ்க்கு ஈடாக கொடுத்தது.
இரண்டாம் அபின் போர்:
இந்த போர் நடந்து சுமார் 15 ஆண்டுக்குள் பிரிட்டிஷ்க்கும் சீனாவிற்கும் மற்றொரு போர் நடந்தது துரதிஷ்டவசமாக இதிலும் சீனா தோற்றது இதற்கு ஈடாகவும் பெருவாரியான பணம் மற்றும் இடங்களை சீனா அந்த நாட்டிற்கு இழப்பீடாக தந்தது.
இந்த அபினி போர்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க சமூக பண்பாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின. முன்பு கூறியபடி பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய மண்ணிலிருந்து அபின் பயிரை வளர்த்து வந்தது. சீனாவில் தடை முயற்சிகள் நீண்டு கொண்டு போக போக பிரிட்டிஷ் அரசாங்கம் வெவ்வேறு புதிய வணிக யுக்திகளை கண்டுபிடித்து இந்தியாவின் அபினியை சீனாவிற்கு அதிக அளவில் கடத்தியது.தற்போது இந்தியாவிற்கு பெருவாரியாக ஆப்கானிஸ்தானில் இருந்து அபின் கடத்திக் கொண்டு வரப்படுகிறது.
இப்படிப்பட்ட பொருளாதார சீரழிவை உண்டாக்கி பெரும் போர்களை உருவாக்கும் என்பதால் பல உலக நாடுகள் அபினியை தடை செய்து வைத்துள்ளது.
சித்த மருத்துவத்தில் அபின்:
அபின் இது கசகசா காயின் பால்,அபின் செடியின் தாவரவியல் பெயர் Papever Somniferum,Linn.
" நல்லவபி னிக்குணத்தை நாடறியும் நாம்புகல்வ
தல்லகுன்மம் வாதம் அருஞ்செவிநோய்-பல்லின்வலி
பேதிமந்தம் அத்திநோய் பீனசம்போம் வன்மையுண்டாம்
சாதியதி ரச்சுத்தி தான்"
-அகத்தியர் குண வாகடம்
நன்று சுத்தி செய்த அபின் வயிற்றில் தோன்றும் குன்மம்,வாத நோய்கள்,காது நோய்,பல் வலி,பேதி ,மந்த நோய் , அத்தி நோய்,பீனிச நோய் போன்றவை போக்கி உடலுக்கு நல்ல வன்மையை உண்டாக்கும் என கூறியுள்ளனர்.
இதற்கு Analgesic,Anti spasmodic,Sedative, Stimulant, Diuretic போன்ற முக்கிய செயல் திறன் உள்ளது.
அக்காலத்தில் காலரா நோய்(ஊழி நோய்) வந்த நோயாளிகளுக்கு பேதி உண்டாகி, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து(dehydration)இறந்து விடுவார்கள்.இந்த நோய் பெருவாரியாக இறப்பை அந்த காலத்தில் உருவாக்கியது.
இந்த dehydration-னால் ஆன இறப்பை பேருவாரியாக கட்டுபடுத்தி வைத்தது அபினியால் ஆன மருந்துகளே, அவைகளில் சில ஊழி மெழுகு,சாமளாதேவி மாத்திரை,கபாட மாத்திரை போன்றவை ஆகும்.இதில் குறிப்பாக கபாட மாத்திரை தற்போது வந்த கோவிட் பெரும் தொற்றில் பேதி குறிகுணங்களுடன் இருந்த நோயாளிகளுக்கு சிறப்பாக வேலை செய்தது.
அபின் சேர்ந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் கழிச்சல் மற்றும் பல நோய்களுக்கு, நோயின் வலிகளை போக்க மட்டும் அல்லாமல் அதனால் வந்த பிற இன்னல்களையும் போக்க பயன்படுகிறது.
தற்காலத்தில் நாம் வீட்டில் அபினியை பயன்படுத்த முடியாது, அனால் அபினியின் விதைக்கு அதாங்க கசகசாவுக்கு அபின் போல சில மருத்துவ குணம் உள்ளது,அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி,
சித்த மருத்துவர் விக்னேஷ் குமார் கிருஷ்ண மூர்த்தி காவேரி சித்த மருத்துவமனை சேலம்.
தொடர்புக்கு 877-858-7349.